ஆய்வுக்குச் சென்ற பெண் அரசு அதிகாரியை மிரட்டிய கல்குவாரி உரிமையாளர்...

author img

By

Published : Aug 25, 2022, 10:12 AM IST

Etv Bharat

உத்திரமேரூர் அருகே தனியார் கல்குவாரியில் ஆய்வுக்கு சென்ற பெண் அரசு அதிகாரியை மிரட்டிய கல்குவாரி உரிமையாளர் மீது நான்கு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பழவேரி கிராமத்தில் தனசேகர் என்பவர் தனியார் கல் குவாரி நடத்தி வருகிறார். இக்கல்குவாரியால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் வந்தன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி உத்தரவின் பேரில் வருவாய் மற்றும் நில அளவைத் துறை அலுவலர்கள் கல்குவாரியில் ஆய்வு செய்து தணிக்கை மேற்கொண்டனர்.

அரசின் வழிகாட்டு விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்பட்டு உள்ளதை ஆய்வுகள் மூலம் அவர்கள் கண்டறிந்தனர். இதனை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் லட்சுமி பிரியா ஆய்வறிக்கையாக மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பித்துள்ளார். இதனால், கல்குவாரி உரிமையாளருக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை அபராத விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கல் குவாரி உரிமையாளர் தனசேகர் மற்றும் அவரது மகன் கார்த்திகேயன் துணை இயக்குனர் லட்சுமி பிரியா விற்கு மிரட்டல் விடுத்து அரசு பணியை செய்ய விடாமல் அச்சுறுத்தியதாக தெரிகிறது.

கல்குவாரி உரிமையாளர்களின் அச்சுறுத்தல் குறித்து துணை இயக்குனர் லட்சுமி பிரியா, சாலவாக்கம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, ஆபாசமாக பேசுதல் 294(b), அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் 353, கொலை மிரட்டல் 506(1), பெண் வன்கொடுமை சட்டம், ஆகிய நான்கு சட்ட பிரிவுகளின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து தலைமறைவான கல்குவாரி உரிமையாளர் மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு....பரந்தூர் கிராமத்தினர் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.