உதயநிதி ரசிகர் மன்றத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாராத்தான் துறை அமைச்சர் மா.சு - ஜெயக்குமார் பேச்சு

author img

By

Published : Oct 5, 2022, 7:20 PM IST

உதயநிதி ரசிகர் மன்ற துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மராத்தான் துறை அமைச்சர் மா.சு - ஜெயக்குமார் பேச்சு

உத்திரமேரூரில் டைல்ஸ் ஷோரூம் திறப்புவிழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் அன்பில் மகேஷ் உதயநிதி ரசிகர் மன்றம் தொடங்கி அதற்கு அமைச்சராக இருக்கலாம் என்றும், மா.சுப்பிரமணியன் மாராத்தான் துறை தொடங்கி அதற்கு அமைச்சராக இருக்கலாம் எனவும் விமர்ச்சித்தார்.

காஞ்சிபுரம்: அதிமுக உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பெருமாள் என்பவர் புதியதாக தொடங்கியுள்ள டைல்ஸ் ஷோரூமின் திறப்பு விழா இன்று உத்திரமேரூரில் நடைபெற்றது. இந்த புதிய டைல்ஸ் ஷோரூமினை அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

முன்னதாக திறப்பு விழாவிற்கு வருகைபுரிந்த அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம், அமைப்புச்செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

திறப்பு விழாவில் பங்கேற்றபின் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 'எள்ளி நகையாடக்கூடிய அளவிற்கு தான் திமுக அரசாங்கத்தின் செயல்பாடுகள் இருக்கின்றன. இன்றைக்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளவே பெண்கள் மிகவும் சங்கடப்படுகிறார்கள். திமுகவின் அமைச்சர் பொன்முடி பேசியதை வைத்துக்கொண்டு, ஓசியில் பயணிக்க ஒரு டிக்கெட் வந்துவிட்டது என சொல்லுகிறார்கள். பெண்கள் கூனி, குறுகி பேருந்துகளில் பயணிக்கக்கூடிய நிலைமை வந்துவிட்டது.

ஓசி என்ற வார்த்தையை இன்றைக்கு திமுகவினர் பிரபலப்படுத்தியுள்ளனர். இலவசம் என்று சொல்லி கொச்சைப்படுத்தாமல் விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிக்ஸி என நாகரிகமான அரசாக அதிமுக விளங்கியது. இன்றைக்கு அநாகரிகமான அரசாக திமுக இருக்கிறது.

படிக்கிறது இராமாயணம், இடிக்கிறது பிள்ளையார் கோயில் என கிராமத்தில் சொல்லுகிற பழமொழி போல் உள்ளது. எந்த மதமாக இருந்தாலும் மதிக்க வேண்டும், திமுக ஆ.ராசா எப்படியெல்லாம் இந்து மதத்தை இழிவுபடுத்தினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தெரியும். இதற்கெல்லாம் வாய் திறக்காத முதலமைச்சர் ஆ.ராசாவை கண்டிக்கவில்லை.

உதயநிதி ரசிகர் மன்றத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாராத்தான் துறை அமைச்சர் மா.சு - ஜெயக்குமார் பேச்சு

ஒரு பக்கம் இந்து மதம் உள்ளிட்ட எந்த மதத்திற்கும், ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள் அல்ல என சொல்லிக்கொண்டு, ஆனால் அதே மறுபக்கம் ஆ.ராசா போன்றோர்களின் செயல்களை கண்டிக்காமல் ஊக்கப்படுத்துவது. ஆ.ராசா மட்டுமல்ல, அவரின் பக்கவாத்தியங்களை வைத்துக்கொண்டு மதத்திற்கு எதிராக வாசிக்க சொல்கிறார்கள்.

சாதி, மதம், இனம், மொழி என விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டவர்களாக எல்லா மதத்திற்கும் சொந்தக்காரன்களாக இருந்தவர்கள் தான் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. எந்த மதத்தையும் இழிவுபடுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என மு.க.ஸ்டாலின் பத்திரிகைகளில், மேடை பேச்சுகளில் சொல்லிவிட்டால் மட்டும் போதாது. ஆனால், இதெல்லாம் பசப்பு வார்த்தைகள், ஏமாற்று வித்தைகள், மோசடியான வார்த்தைகள் என மக்களுக்குத் தெரியும்' எனத் தெரிவித்தார்.

மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், நாள்தோறும் பேட்டிக்கொடுப்பதில் பஞ்சம் கிடையாது. மாராத்தான் என புதிய துறை ஒன்றை ஆரம்பித்து அதற்கு அவரை அமைச்சராக்கி இருக்கலாம். அதேபோல் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு கல்வித்துறையை எடுத்துவிட்டு உதயநிதி ரசிகர் மன்றம் என ஆரம்பித்து அதற்கு தலைவராக்கி, அமைச்சராக்கி இருக்கலாம். அமைச்சர்கள் எல்லாம் உதயநிதி புகழ் பாடுபவர்களாகத் தான் உள்ளனர்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் டெங்கு, மலேரியா, மர்ம காய்ச்சல் என சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் கிடையாது. ஒரு அரசு அமைச்சர் அரசு விழாவை புறக்கணிக்கலாமா.
இப்படியொரு விநோதமான அமைச்சரை தமிழ்நாடு பெற்றுள்ளது ஒரு வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரிய விசயம்’ எனத்தெரிவித்தார்.

மேலும் அவர், ’நாங்கள் தான் கட்சி, இதில் என்ன மாறுபட்ட கருத்து உள்ளது. எங்கள் கட்சி சார்பில் பசும்பொன் தேவருக்கு கொடுத்த கவசம் போன்ற உடமைகள் எல்லாம் எங்களிடம் தான் ஒப்படைப்பார்கள். அதில் உரிமைகோர ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எந்த வித தார்மிக உரிமையும் இல்லை, அவர்கள் அதிமுக கட்சியும் இல்லை’ என்றார்.

இதனைத்தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 'எந்த விஷயத்திற்கு இந்த அரசு செவி சாய்த்தார்கள். காது கேட்கின்ற அரசு செவி சாய்க்கும், செவிட்டு அரசாங்கம் எப்படி செவி சாய்க்கும். குருட்டு அரசாங்கத்திற்கு பார்வை தெரியுமா, கண் இருந்தும் குருடனாக, காது இருந்தும் செவிடனாக இருக்கின்ற அரசு தான் திமுக அரசு' எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் - தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதிய மத்திய சுற்றுச்சூழல் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.