மகளிர் உரிமைத் தொகை திட்டம்; காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்!
Published: Sep 15, 2023, 11:15 AM


மகளிர் உரிமைத் தொகை திட்டம்; காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்!
Published: Sep 15, 2023, 11:15 AM

Magalir Urimai Thogai: குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் துவங்கி வைத்தார்.
காஞ்சிபுரம்: 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சியமைத்த பிறகு இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் திட்டம் துவங்கத் தாமதமாவது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், கடந்த பட்ஜெட் தொடரின் போது, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்.15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்து, திட்டத்தைச் செயல்படுத்த 7,000 கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து அரசு சார்பில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் பதிவேற்றம், அதன் மீதான ஆய்வு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமத்தொகை திட்டம் துவக்க நாளுக்கு முன்னதாவவே சில பயனாளிகளின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளான இன்று அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கலைஞரின் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்குத் திட்டத்தின் ஏடிஎம் அட்டையின் மாதிரியை வழங்கி திட்டத்தைத் துவங்கி வைத்தார்.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசால் துவங்கப்பட்ட புதுமைப்பெண் திட்டம், பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த திட்டங்களைக் கண்டு பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
