'ஸ்ரீமதியின் மரணத்தை மறைக்க பார்க்கிறார்கள்' தாயார் செல்வி குற்றச்சாட்டு

author img

By

Published : Nov 22, 2022, 11:03 AM IST

தாயார் செல்வி குற்றச்சாட்டு

ஸ்ரீமதியின் மரணத்தை மறைக்க பார்க்கிறார்கள் என அவரது தாயார் செல்வி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி: கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் திடீரென கலவரமாக மாறியது.

மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட 5 பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றனர்.

தாயார் செல்வி குற்றச்சாட்டு

இந்நிலையில் ஸ்ரீமதியின் தாய் செல்வி சார்பில் வக்கீல் காசிவிஸ்வநாதன் நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாணவி ஸ்ரீமதியின் உடலானது இருமுறை உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இவ்வாறு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்தது. அவர்கள் அளித்த ஆய்வறிக்கையின் நகல், ஸ்ரீமதி எழுதியதாக கைப்பற்றப்பட்ட கடிதத்தின் உண்மை தன்மையை அறிய அனுப்பப்பட்ட ஆய்வறிக்கையின் நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதேபோல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி வைத்துள்ள ஸ்ரீமதியின் பெரியப்பா செல்வத்தின் செல்போனை திரும்ப ஒப்படைக்கக்கோரியும் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக ஸ்ரீமதியின் தாய் செல்வி, பெரியப்பா செல்வம் ஆகியோர் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி கூறுகையில், இவ்வழக்கின் விசாரணை ஒருதலைபட்சமாக நடந்து வருகிறது. முழுக்க, முழுக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார், அரசு இவையெல்லாம் குற்றவாளிகளுக்கு துணைபோகிறது. உண்மைகள் கொட்டிக்கிடந்தும் மறைக்கிறார்கள்.

இதுவரை நடந்தப்பட்ட விசாரணையை வைத்தே, ஏற்கனவே குற்றவாளிகள் செய்த கொலைகளையும் போலீசார் கண்டுபிடித்திருக்கலாம், ஏன் அதை செய்யவில்லை. அப்பள்ளியை திறக்க வேண்டிய அவசியமே கிடையாது. இவ்வழக்கு விசாரணை எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. மாணவி ஸ்ரீமதி இறப்பு திட்டமிட்ட கொலை என்றார்.

மேலும் ஸ்ரீமதியின் தொலைபேசியினை கேட்கிறார்கள், பள்ளி விடுதியில் மற்றும் வளாகத்தில் மாணவர்களுக்கு தொலைபேசி பயன்படுத்த அனுமதி இல்லை. பின்னர் ஸ்ரீமதி எப்படி தொலைபேசி வைத்திருக்க முடியும். விடுதியில் உள்ள பொதுவான தொலைபேசியை தான் போலீசார் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சூட்கேஸில் சடலமாக இளம்பெண் - ஆணவக்கொலை செய்ததாக தந்தை வாக்குமூலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.