கள்ளக்குறிச்சி கலவரம் நடந்த தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிய மனு தள்ளுபடி...

author img

By

Published : Sep 29, 2022, 2:19 PM IST

Etv Bharat

கள்ளக்குறிச்சி கலவரம் நடந்த தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி: கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி மரண சம்பவத்தின் போது, பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பள்ளி கட்டடம், பொருட்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

உயர்நீதிமன்ற உத்தரவின் படி மாணவியின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், பள்ளி மீண்டும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், இது மாணவர்கள் - பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பள்ளி விடுதிக்கு அங்கீகாரம் பெறாததால் பள்ளியை அரசு ஏற்று நடத்த கோரி செப்டம்பர் 14ம் தேதி மனு அளித்தும் அது பரிசீலிக்கப்படவில்லை. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிறப்பு அதிகாரியை நியமித்து பள்ளியை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் உள்ளது. அதற்காக அரசு அதன் நிர்வாக பொறுப்பை ஏற்க வேண்டும் என கோர முடியுமா?, அரசே ஏற்க வேண்டும் என்றால் நிலம், கட்டடங்களுக்கு விலை கொடுக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் இருக்கிறது தெரியுமா? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.

பின்னர், மனுவில் எந்த தகுதியும், நியாயமான காரணம் ஏதும் இல்லை என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்பின் ஊர்வலம் பேரணிக்கு அனுமதி கிடையாது - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.