''நீ கொஞ்சம் வாயை மூடு'' மீண்டும் சர்ச்சையில் சிக்கிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி!

author img

By

Published : Mar 16, 2023, 3:26 PM IST

Minister Ponmudi is again involved in controversy by defaming the public

கள்ளக்குறிச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் இருந்த பெண் ஒருவரை அவமரியாதையாக பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

அமைச்சர் பொன்முடி பொதுமக்களை அவதூறாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் நகராட்சி சந்தப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்ட கோஷா குளம் மற்றும் நகராட்சி சந்தைப்பேட்டை, விஜயலட்சுமி நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, திருக்கோவிலூர் நகர மன்றத் தலைவர் டி.என்.முருகன், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் கீதா உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, ' இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் என அனைவரும் சமம்; ஆண், பெண் என அனைவரும் சமம் என உருவாக்கி செயல்படுத்தியவர் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருடைய திட்டம் தான் இந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம். இதுதான் திராவிட மாடல்’ என்று பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென கூட்டத்தில் ஒரு பெண் ''எல்லாம் குறையாகத் தான் இருக்கு'' எனக் கூறினார்.

அதற்கு அமைச்சர் பொன்முடி, ''நீ வாயை மூடு கொஞ்சம்... உங்க வீட்டுக்காரர் இருக்காரா..?''; அவர் எப்பயோ போயிட்டாருன்னு அந்த பெண்மணி தெரிவிக்க, ''பரவாயில்ல... நல்ல வேலை அவர் போய் சேர்ந்துட்டாரு. நீயே அனுப்பிவிட்டு இருப்ப..!'' என பொன்முடி மைக்கில் பேசினார். பின்னர் கட்சி பிரமுகர்கள் பலரும் அந்த பெண்மணிக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க, ''பாவம் அது குறைய அது சொல்லுது, விடுங்க அப்படி'' என்று அமைச்சர் பொன்முடி பேச்சை திசை திருப்பி விட்டார். இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர் பொன்முடி ஏடாகூடமாக ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவர் பொதுவெளியில் தொடர்ந்து இதுபோல் பொதுமக்களை இழிவாகப் பேசுவது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியில் ஆட்சியின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது.

மேலும் அவர் இதற்கு முன்னதாக பொது வெளியில், 'ஓசி-ல தான பஸ்ல போறீங்க', 'எனக்கு அப்டியோ ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க', 'இத உட்காரும்மா', 'ஏம்மா நீ எஸ்.சி தான', 'வாயை மூடு' என பொதுமக்களை இழிவாகப் பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அதிலும் அவர் பெரும்பாலும் பெண்களைத் தான் இழிவாகப் பேசியுள்ளார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதுபோல் தொடர்ந்து, பொதுமக்களையும் குறிப்பாக பெண்களையும் அவமரியாதையாக பேசி வருவதற்கு கட்சி தரப்பில் இருந்து, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது, திமுகவை விமர்சனங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: +2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்; அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.