கள்ளகுறிச்சி கலவரம்... விசாரணைக்கு ஆஜரான யூடியூப் சேனல் நிர்வாகிகள்

author img

By

Published : Sep 23, 2022, 11:16 AM IST

கள்ளகுறிச்சி மாணவி மரணம் தொடர்பபாக பொய்யான தகவல் பரப்பிய யூடியூப்பர்கள் ஆஜர்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட 5 யூடியூப்பர்கள் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் 25க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 5 யுடியூப்பர்கள் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலர்கள் முன்பு நேரில் ஆஜராகினர்.

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஜீலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜூலை 17ஆம் தேதி அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மாணவி மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பிரபல யூடியூப் சேனல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட யூடிப்பர்களான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் குமார், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வடிவேல், சென்னை சேர்ந்த முகம்மது ஷபி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய ஐந்து யூடியூப்பர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் ஐந்து பேரும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலர்கள் முன்பு விசாரணைக்காக நேரில் ஆஜராகினர். இவர்களிடம் பல்வேறு கோணங்களில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இனிவரும் காலங்களில் பள்ளி மாணவி மரணம் தொடர்பான விசாரணைக்கு அழைக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள யூடிப்பர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கனியாமூர் பள்ளியில் 67 நாட்களுக்கு பின் மறு சீரமைப்பு பணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.