விசாரணை செய்த காவல்துறை அலுவலர் மீது பீர் பாட்டிலைக்கொண்டு அடித்த பாஜக நிர்வாகி; அதிரடி கைது

author img

By

Published : Sep 18, 2022, 12:30 PM IST

பீர் பாட்டிலால் தாக்கிய பாஜக நிர்வாகிகள் கைது

கள்ளக்குறிச்சியில் காவல் துறையினர் விசாரணை செய்து கொண்டிருக்கையில் பீர் பாட்டிலால் தாக்கிய பாஜக நிர்வாகி உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி: வ.உ.சி நகர் 7-ஆவது தெரு பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று இரவு பாஜகவினர் சார்பில் அந்தப் பகுதியில் உள்ள கடையின் சுவற்றில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அங்கு போஸ்டர் ஒட்டுவதற்கு முன்னதாக அந்த கடையின் உரிமையாளர் தினேஷ், தன் கடையின் சுவற்றில் போஸ்டர் ஒட்டவேண்டாம் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதனைப்பொருட்படுத்தாமல் பாஜக நிர்வாகிகள் இரவு நேரத்தில் அந்தப்பகுதியில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த நிலையில் அந்த போஸ்டரை செப்டம்பர் 17ஆம் தேதி அன்று அந்த கடையின் உரிமையாளர் தினேஷ் கிழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள் அந்தப்போஸ்டரை கிழித்த நபரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் இருதரப்பினரிடையே சமாதானப்பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த கள்ளக்குறிச்சி பாஜக நகரத்தலைவர் சத்யா மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மனித வள மேம்பாட்டுப்பிரிவு மாவட்டச்செயலாளர் செல்லப்பன் ஆகிய இருவரும், காலி பீர் பாட்டிலை காவல்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு இருந்த இடத்தை நோக்கி வீசி உள்ளனர்.

விசாரணை செய்த காவல்துறை அலுவலர் மீது பீர் பாட்டிலைக்கொண்டு அடித்த பாஜக நிர்வாகி; அதிரடி கைது

இதில் பீர் பாட்டில் நொறுங்கி காவல்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பட்டுள்ளது. இதில் இருவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். விசாரணை நடைபெற்று வரும் நிலையில் காவல்துறையினர் நின்று கொண்டிருக்கும் இடத்தை நோக்கி பீர் பாட்டிலை வீசிய கள்ளக்குறிச்சி பாஜக நகரத்தலைவர் சத்யா, கள்ளக்குறிச்சி மாவட்ட மனித வள மேம்பாட்டுப்பிரிவு மாவட்டச்செயலாளர் செல்லப்பன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் நேரில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப்பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கணவருக்கு 10 நிமிடம் "கரண்ட் ஷாக்" கொடுத்துவிட்டு காதலனுக்கு போன் செய்த மனைவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.