அண்ணியை கண்டித்த தம்பி கொலை: ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை
Published: Dec 1, 2022, 12:23 PM


அண்ணியை கண்டித்த தம்பி கொலை: ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை
Published: Dec 1, 2022, 12:23 PM
ஈரோடு மாவட்டத்தில் அண்ணியை கண்டித்த தம்பியை குடும்பமே சேர்ந்து அடித்து கொலை செய்த வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு: பெரிய சேமூர் கல்லங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் - நீலாவதி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவி இருவருமே தறிப்பட்டரையில் ஒன்றாக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு செல்வகுமாரின் அண்ணனான மணிகண்டனின் மனைவி லட்சுமி, வேறொரு நபருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அடேரிக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பாக மணிகண்டன், தனது தம்பி முறையான செல்வகுமாரிடம் நடந்ததை கூறியுள்ளார். தொடர்ந்து அண்ணனும் தம்பியும் பல்வேறு இடங்களில் லட்சுமியை தேடியுள்ளனர். பின்னர் சேலம் சென்று லட்சுமியை மீட்டு வந்துள்ளனர். இவ்வாறு மீட்டு வரும் வழியில் லட்சுமியை செல்வகுமார் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கணவரின் வீட்டுக்கு வந்த லட்சுமி, தனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களிடம் தனது கணவர் மணிகண்டனின் தம்பி செல்வகுமார் தாக்கியதை கூறியுள்ளார். இதைக்கேட்டு லட்சுமியின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் கோபத்துடன் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் செல்வகுமார் தனது மனைவி மற்றும் மகனுடன் இரு சக்கர வாகனத்தில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது லட்சுமியின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள், செல்வகுமாரை வழிமறித்து அவர்களை தாக்கியுள்ளனர்.
இதில் செல்வகுமார், அவரது மனைவி நீலாவதி மற்றும் மகன் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு அடித்து உதைத்துள்ளனர். மேலும் கத்தரிக்கோல், மரக்கட்டை உள்ளிட்ட ஆயுதத்தை பயன்படுத்தியும் செல்வகுமாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் மயக்கம் அடைந்த செல்வகுமார், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். , இதுதொடர்பாக ஏழு பேரை கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு 2018ஆம் ஆண்டு முதல், நான்கு ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று (டிச 1) “இந்த கொலை வழக்கில் ஜோதிமணி, லட்சுமி, பரமேஸ்வரி, பாப்பம்மாள், குமரேசன், அண்ணாதுரை, மூர்த்தி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது” என ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: வீராங்கனை பிரியா மரண வழக்கு.. மருத்துவர்களுக்கான கேள்விகளை தயார் செய்த நீதிபதிகள்!
