ஆளும் கட்சி தான் வெல்லும் என்ற மாயையை கட்டமைத்துள்ளனர் - சீமான்

author img

By

Published : Jan 22, 2023, 6:45 PM IST

ஆளும் கட்சி தான் வெல்லும் என்ற மாயையை கட்டமைத்துள்ளனர் - சீமான்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் எனவும்; நாம் தமிழர் கட்சியின் சார்பில் சகோதரி ஒருவர் வேட்பாளராக நிற்பார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மேற்கொள்ளவுள்ள களப்பணிகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் மாவட்ட வாரியாக 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கூட்டம் சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்றக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "வரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும். தங்களது கட்சி சார்பில் சகோதரி ஒருவர் வேட்பாளராக நிற்பார். மேலும் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் கவலை இல்லை, நாங்கள் தனித்து போட்டியிடுவோம்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், காவல் துறை, உளவுத்துறை எல்லாம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும். அதனால், ஆளும் கட்சிதான் இடைத் தேர்தலில் வெல்லும் என்ற மாயையை கட்டமைத்துவிடுகின்றனர். கடந்த 2 ஆண்டில் நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் ஓட்டுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை. இதற்கிடையே, முதியோர் உதவித்தொகை கொடுக்க முடியாமல் உள்ளனர். ஆனால், ஓட்டுக்கு மட்டும் காசு கொடுக்கிறார்கள். எங்களிடம் கோடிகள் இல்லை. ஆனால், கொள்கைகள் இருக்கிறது.

யார் ஆதரவு கொடுத்தாலும் பாஜக வெல்லாது. பணபலம், ஊடக ஆதரவு, கூட்டணி என எந்த உதவியும் இல்லாமல் 3-ம் இடத்திற்கு வந்துள்ளேன். இதுவே பெரிய சாதனை. நான் பேசினால், காசு கொடுக்காமல் கூட்டம் கூடுவார்கள். மதுரை எய்ம்ஸ் என்பது ஏமாற்று வேலை. கட்டி விட்டால் அரசியல் முற்று பெற்றுவிடுமே. ராமர்கோவில் கட்டுவது போல தான்" எனத் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என பாஜக கூறுவது தொடர்பான கேள்விக்கு, "தமிழர் சமய அறநிலையத்துறை என்று வைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். கோயில் அரசில் இருக்கும் போதே பல சிலைகள் காணாமல் போகின்றன. அண்ணாமலை ஏன் தனியாரிடன் கொடுக்கச் சொல்கிறார் எனத் தெரியவில்லை’’ என்றார்.

வேங்கை வயல் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, " குற்றம் நடந்தது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு எதற்கு சிபிசிஐடி. அவர்களை கைது செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதே தான் ஸ்ரீமதி விவகாரத்திலும் நடந்தது" என்றார்.

மார்கழி மக்களிசை நடத்திய போது அரசு இது போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்த அரசு சார்ந்த கலை மன்றங்களில் எங்களுக்கு வாய்ப்பு தருவதில்லை என பா.ரஞ்சித் கூறியது தொடர்பான கேள்விக்கு "ரஞ்சித் செய்து வருவது நல்ல முயற்சி. அரசு கவனம் எடுத்து நடவடிக்கை எடுத்தால் ரஞ்சித் ஊக்கத்தோடு மேலும் செயல்படுவார்", எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் படிக்க வரும் வெளிமாநில மாணவர்கள் தமிழ் கற்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.