ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஒரு பக்கம் மாதிரி வாக்குப்பதிவு, மறுபக்கம் ரெய்டு, அடுத்தடுத்து ஆய்வு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஒரு பக்கம் மாதிரி வாக்குப்பதிவு, மறுபக்கம் ரெய்டு, அடுத்தடுத்து ஆய்வு
ஈரோட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. பின், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவிற்குத் தேவையான அனைத்து ஆயத்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஈரோடு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேலட் யுனிட் மற்றும் கண்ட்ரோல் யுனிட் இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஈரோடு மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் 'இன்று(ஜன.24) பெல் நிறுவன அதிகாரிகளை வைத்து முதல் கட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலுக்கு அனுமதிக்கப்பட்ட 1500 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் 1480 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5% வாக்குப்பதிவில் மாதிரி வாக்குப்பதிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சரியாக உள்ளது' எனத் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்று வருகின்றது.
கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் நிலை கண்காணிப்பு குழு வாகனத் தணிக்கை செய்தபோது, கரூரில் இருந்து ஈரோட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் கவின் என்பவர் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து 34ஆயிரத்து 150 ரூபாயைக் கைப்பற்றினர். அவற்றை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
பின், வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கான இடம் தேர்விற்காக, ஈரோடு அடுத்துள்ள சித்தொட்டில் IRTT அரசின் சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு இடம் தேர்வு செய்வதற்காக மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன் இந்த இடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த தேர்தலில் இங்கே வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் தகவல்கள் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்படும். அவர்களின் அனுமதி பெற்றவுடன் இறுதி செய்யப்படும்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'சேர் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?' திமுக நிர்வாகி மீது கல் வீசிய அமைச்சர் நாசர்!
