Locanto app cheating: வலைத்தளம் மூலம் வலைவிரிக்கும் லோகாண்டோ.. போலீஸ் எச்சரிக்கை!
Published: Sep 16, 2023, 8:00 PM


Locanto app cheating: வலைத்தளம் மூலம் வலைவிரிக்கும் லோகாண்டோ.. போலீஸ் எச்சரிக்கை!
Published: Sep 16, 2023, 8:00 PM

Locanto app: லோகாண்டோ ஆப் மூலம் சபல எண்ணம் கொண்டவர்களை குறிவைத்து ஒரு மோசடி கும்பல் செயல்பட்டு வருவதாகவும், அவர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் முன்வந்து புகார் அளித்தால் அவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் பெருந்துறை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு: செல்போன் மூலம் பல்வேறு வகையிலும் ஆன்லைன் மூலம் மோசடி நடைபெறுகிறது. அந்த வகையில், தற்போது லோகாண்டோ (Locanto) என்ற செயலியை பலரும் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இந்த செயலியில் தமிழகம் முழுவதும் பல முக்கிய நகரங்களில் இளம் பெண்களைக் கொண்டு மஜாஜ் செய்யும் செயலியாக பயன்படுத்தி, அதில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கூறுகையில், “இந்த செயலியில் உள்ள இளம் பெண்களின் கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து, சல்லாபத்தைத் தேடும் இளைஞர்கள் அதில் உள்ள செல்போன் எண்ணிற்கு முதலில் தொடர்பு கொள்கின்றனர். அதில் பேசும் நபர்கள், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேருந்து நிலையம் எதிரில் உள்ள டீ கடைக்கு வர சொல்கின்றனர்.
அங்கு வந்தவுடன் அதே எண்ணிற்கு மீண்டும் தொடர்பு கொள்ளும்போது அனுமதி கட்டணமாக ஆயிரம் ரூபாயை பேடிஎம் மூலமாக அனுப்ப வேண்டும் என கூறுகின்றனர். ஆயிரம் ரூபாயை அனுப்பிய அடுத்த நொடியில் பணம் அனுப்பியவர் எண்ணிற்கு வாட்ஸ் ஆப்-இல் பல இளம் பெண்களின் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்புகின்றனர்.
புகைப்படத்தை பார்த்த நபர்கள், தனக்கு பிடித்த பெண்ணின் புகைப்படத்தை தேர்வு செய்தவுடன் அடுத்த நொடியில் பணம் அனுப்பிய எண்ணில் வரும் அழைப்பு, “நீங்கள் தேர்வு செய்த பெண் தயாராக உள்ளார், அவரிடமே பேசவும்” என்று அழைப்பை அந்த பெண்ணிடம் இணைக்கும். அப்போது பேசும் பெண் ‘மாமா உங்களுக்காக காத்து இருக்கிறேன் விரைந்து வரவும்’ என்று கூறியவுடன் இணைப்பு துண்டிக்கப்படும்.
மீண்டும் அதே செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்போது ஏற்கனவே பேசிய நபர், “நீங்கள் பேசிய பெண் தற்போது தயாராக உள்ளார். ஆனால் கூடுதலாக மீண்டும் ஒரு 3 ஆயிரம் செலுத்த வேண்டும்” என்றும், “செலுத்தினால்தான் அந்த பெண் வருவார். எந்த பணத்தையும் நாங்கள் கையில் வாங்குவது இல்லை” என்று நம்பிக்கையுடன் பேசுகின்றனர்.
இதனையும் உண்மை என நம்பி 3 ஆயிரம் ரூபாயை செலுத்தும் நபர் சிறிது நேரத்தில் அதே எண்ணிற்கு அழைக்கும்போது உங்களை அழைத்துச் செல்ல ஆட்கள் வந்து கொண்டு உள்ளனர், சர்வீஸ் தொகையாக மீண்டும் ஒரு ஆயிரம் ரூபாயை கேட்பார்கள். அப்போதுதான் பணத்தை கொடுத்தவர், தான் ஏமாற்றப்படுவதை உணருவார். அதனையடுத்து பணம் அனுப்பிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்போது பணம் அனுப்பிய செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கும்” என தெரிவித்தார்.
பணத்தை இழந்த நபர்கள் மானம் கருதி நடந்த சம்பவத்தை குடும்பத்தினரிடமும், காவல் துறையிடமும் தெரிவிக்காமல் இருப்பதை இது போன்ற மோசடி கும்பல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறனர். இதுபோன்ற செயலியை யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்யும் பெருந்துறை காவல் நிலைய ஆய்வாளர் மசுதாபேகம், இதுபோன்று மோசடி செய்யும் நபர்கள் குறித்து புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்று பொதுமக்களுக்கு இந்த செயலியை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
