போலி சான்றிதழ்: அரசுப்பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Jan 22, 2023, 5:24 PM IST

Etv Bharat

கோபிசெட்டிபாளையம் அருகே போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியையாக கவுந்தப்பாடி தென்காட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலி சான்றிதழ்: அரசுப்பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி தென்காட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியராக ஜெயக்குமார் என்பவரது மனைவி ஏசுமரியாள் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தென்காட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆசிரியர்கள் உண்மைத்தன்மை சான்று வழங்க அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ஏசுமரியாள் அவருடைய சான்றிதழ்களை சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருடைய ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை பரிசோதனை செய்ததில் அவை போலியான சான்றுகள் எனத் தெரியவந்தது. மேலும், ஏசுமரியாள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் பவானி வட்டார கல்வி அலுவலர் கேசவன் ஆகியோர் நடத்திய விசாரணையில் போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் பின்னர், போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த ஏசுமரியாள் மீது பவானி வட்டார கல்வி அலுவலர் கேசவன் அளித்தப் புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று (ஜன.22) விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசுமரியாள் கடந்த 1992ஆம் ஆண்டு ஆசிரியர் பட்டயத்தேர்வு முடித்த நிலையில், அதற்கான மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 11 வயது சிறுவன் சிறுத்தை தாக்கி பலி.. தொடரும் அவலத்தால் மக்கள் மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.