ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி!

author img

By

Published : Jan 21, 2023, 8:52 AM IST

Updated : Jan 21, 2023, 2:45 PM IST

கோப்புப்படம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை: பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக நாங்கள் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். வரும் 2026ஆம் ஆண்ட வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர். தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களில் அப்படி தான் உள்ளது. தேர்தல் ஆணைத்தின் படிவம் A, B படிவத்தில் கையெழுத்திட நான் தயாராக இருக்கிறேன். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் நான் கையெழுத்து போட்டிருந்தேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. மேலும், அதன் தீர்ப்பை வைத்து தான் செயல்பட முடியும். கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு சட்டவிரோதமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு சட்டவிரோதமாக கூட்டப்பட்டதால் நாங்கள் கலந்துக் கொள்ளவில்லை. இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் ஆதரவை கோருவோம். எங்களிடமும் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுதான் இருக்கின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் நாங்கள் ஆதரிப்போம். சின்னத்தை முடக்க நான் எந்த காலத்திலும் தடையாக இருக்க மாட்டேன். குழப்பத்தை தவிர்க்க அனைவரும் ஒன்று சேர வேண்டும். திமுக ஆட்சியின் அவலங்களை தினந்தோறும் அறிக்கையின் வாயிலாக கூறிகொண்டுதான் இருக்கிறோம். சசிகலா பேச்சுவார்த்தைக்கு வந்தால் நாங்கள் பேசுவோம்" என கூறினார்.

முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்காமலேயே வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். ஈபிஎஸ் தரப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். 2021ஆம் ஆண்டு இந்த தொகுதி த.மா.கா கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஜி.கே.வாசன், தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பறவைகள் கணக்கெடுப்பில் களமிறங்கிய கல்லூரி மாணவிகள்!

Last Updated :Jan 21, 2023, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.