கைக்குழந்தைக்கு மது ஊற்றி கொடுமை செய்த பெண் - போலீஸ் விசாரணை

author img

By

Published : Sep 16, 2022, 9:45 PM IST

Etv Bharatகை குழந்தைக்கு மது ஊற்றி கொடுமை செய்த பெண்

கைக்குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்து கொடுமை செய்த போதைப்பெண்ணிடம் இருந்த குழந்தையை மீட்ட காவல் துறையினர், அக்குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.

திண்டுக்கல் மாநகர் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை வைத்துக்கொண்டு, அந்த குழந்தைக்கு மது ஊற்றி, அந்தப் பெண்ணும் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் பேருந்து நிலைய காவல் கட்டுப்பாட்டு பகுதிக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்தபோது, குழந்தை பிறந்து 13 நாள் ஆகிறது, கரூரில் பிறந்தது என முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் காவலர் சந்தேகமடைந்தார்.

பின்னர், அங்கு விரைந்து வந்த பெண் காவலர் அந்தப்பெண்ணின் கையில் இருந்து குழந்தையை மீட்டு குழந்தையை பார்த்தபோது குழந்தை மயக்கத்தில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு குழந்தைகள் பிரிவில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது.

அந்த குழந்தை சுமார் 2 கிலோ 600 கிராம் எடை இருந்தது. அது ஆண் குழந்தை என்றும்; பிறந்து ஒரு மாதத்திற்குள் இருக்கும் எனவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, அந்தப் போதைக்கார பெண்ணிடம் விசாரணை செய்துகொண்டிருந்தபோது அவர் மடியில் இருந்த இரண்டு மது பாட்டில்கள் கீழே விழுந்தன.

இதனால், அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், அந்தப் பெண்ணிடம் விசாரிக்க முயற்சித்தபோது அதீத மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், அந்தப் பெண்மணி போதையில் குழந்தையை கையில் வைத்திருந்தபோது குழந்தையின் கைகளைத் திருகி வளைத்து கொடுமை செய்ததாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணை காவல் துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், இரவு நேரத்தில் அந்த பெண்மணி அங்கிருந்து தப்பித்துச்சென்றார். மருத்துவமனையில் தற்போது குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறது.

கைக்குழந்தைக்கு மது ஊற்றி கொடுமை செய்த பெண் - போலீஸ் விசாரணை

இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அந்தக் குழந்தை யார் குழந்தை என்றும் கடத்தப்பட்ட குழந்தையா என்ற கோணத்திலும் காவல் துறையினர், விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜிபிஎஸ் டிராக்கிங் செய்து திருடு போன பைக்கை மீட்ட உரிமையாளர்... சகோதரர்களுக்கு தர்மஅடி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.