மொரப்பூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர்- பி.ஜி.மல்லையா நேரில் ஆய்வு!

author img

By

Published : Sep 22, 2022, 10:39 PM IST

மொரப்பூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர்- பி.ஜி.மல்லையா நேரில் ஆய்வு!

தர்மபுரி மொரப்பூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தர்மபுரி: மொரப்பூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளரிடம் பேசிய பி.ஜி.மல்லையா, ’மொரப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ரயில்கள் மற்றும் சில ரயில்களை இங்கு நிறுத்தக்கோரிக்கை வைத்துள்ளனர். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மொரப்பூர் தர்மபுரி ரயில்வே திட்டம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநில அரசு நில அளவைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அக்டோபர் மாதத்தில் பணிகள் நிறைவடையும். இப்பணிகளை தர்மபுரி எம்.பி. தொடர்ந்து வருகிறார்’ என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், ’தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட ரயில் திட்டங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மேம்பாடு குறித்து வலியுறுத்தியதன் பேரில் பல்வேறு திட்டங்களை ரயில்வே நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதை நில அளவைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தர்மபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நில அளவைப் பணிகள் முடிவடைந்துவிட்டன. எட்டு கிலோமீட்டர் தர்மபுரி நகரப்பகுதியில் புதிய சாலைக்கான சர்வே பணிகள் நடைபெற உள்ளன. அக்டோபர் 31ஆம் தேதிக்குள் நில அளவைப் பணிகள் முடிவடையும்.

அளவைப் பணிக்காக பணியாளர்களுக்கு ரூ.47 லட்சம் நிதியை ரயில்வே நிர்வாகம் அளித்துள்ளது. அதற்கு நேரில் மல்லையா அவர்களிடம் நன்றி தெரிவித்தேன்.

கரோனாவுக்குப் பிறகு பல ரயில்கள் மொரப்பூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. மக்கள் கோரிக்கையை ஏற்று சில ரயில்கள் மொரப்பூர் ரயில் நிலையத்தில் நிற்க கோரிக்கை மனுவை அளித்துள்ளேன். ஜோலார்பேட்டை வரை வரும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் மொரப்பூர் வரை நீட்டிக்க வேண்டும். கோவை எக்ஸ்பிரஸ், பழனி எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் வழங்கியிருக்கிறேன்’ என்றார்.

மொரப்பூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர்- பி.ஜி.மல்லையா நேரில் ஆய்வு!

இதையும் படிங்க:அதிமுக அலுவலக வன்முறை வழக்கு - சிபிசிஐடி ஆபிஸில் கையெழுத்திட்ட ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.