'படிக்கும் காலத்தில் ஒழுங்கா படிக்கவில்லை' - புத்தக காட்சி திறப்பு விழாவில் அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வம் பேச்சு!

author img

By

Published : Jun 24, 2022, 8:35 PM IST

புத்தக கண்காட்சி திறப்பு விழாவில் அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வம் பேச்சு

தர்மபுரியில் 10 நாள் புத்தக காட்சியை வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தகடூர் புத்தகப்பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து தர்மபுரியில் நான்காம் ஆண்டு புத்தகத்திருவிழாவை, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று(ஜூன் 24) தொடங்கியது. புத்தகத் திருவிழாவை வேளாண்மை மற்றும் உழவர்நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

புத்தகத்திருவிழா ஜூன் 24 முதல் ஜூலை 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் 100 அரங்குகளில் 50 ஆயிரம் தலைப்புகளில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்காக வர உள்ளன. இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்ற 10 நாட்களும் மாலை நேரங்களில் அறிவு சார் அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.

தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்,' எனக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. படிக்கும் காலத்திலேயே ஒழுங்காக படிக்கவில்லை. ஆனாலும் ஸ்ட்ராங்காக படித்தேன். படிக்கும் பொழுது சோதனை ஏற்பட்டாலும் திருமண வயதில் படிப்பை முடித்தேன். என் படிப்புக்கு அடித்தளம் அதிகம். நான் பதினொன்றாம் வகுப்பு, பியூசி, பட்டப்படிப்பை எத்தனை ஆண்டுகள் படித்தேன் என்று எனக்குத்தான் தெரியும்.

இது தான் படிப்பில் இடைநிற்றல். நான் மனச் சோர்வு அடையாமல் வைராக்கியமாக படித்து பிஎஸ்சி முடித்து, பி.எல் படித்தேன். டாக்டராக வேண்டும் என்பது கனவு. மனதில் வலி இருந்ததால் டாக்டர்களுக்கெல்லாம் மந்திரியாகக் கூடிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பணியாற்றினேன். எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் ஆகி டாக்டர்களுக்குப் பட்டம் வழங்கினேன்.

பொறுத்தார் பூமி ஆள்வார். சிலா் உடனே ஒன்றியச்செயலாளர் பதவி வேண்டும். எம்.எல்.ஏ சீட்டு வேண்டும் என கேட்கிறார்கள். உடனே ஆக முடியாது. உழைத்தால் தான் அந்தத் தகுதி வரும். தற்போது முதலமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் ஆவதற்கு முன்பே தம்மை சந்திக்க வருபவர்கள் பொன்னாடை அணிவிக்கக்கூடாது. புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அப்போது இருந்து திமுகவினா் புத்தகங்களை பரிசாக தரும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். தான் சிறுவயதில் பொன்னியின் செல்வன் மற்றும் துப்பறியும் நாவல், படித்ததால் தான் யார் யார் தவறு செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடிகிறது. ஆத்திச்சூடி அது என்ன என்று தெரியாது. இதற்கு மேல்தான் புத்தகம் வாங்கிப்படிக்க வேண்டும்.

புத்தக கண்காட்சி திறப்பு விழாவில் அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வம் பேச்சு

புத்தகத் திருவிழா மாநிலம் முழுவதும் நடத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தகத்திருவிழா மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி - ஓபிஎஸ்ஸின் தனிப்பட்ட சந்திப்பு சாத்தியமா? - ஒற்றைத்தலைமை ஆட்டத்தில் காய் நகர்த்துகிறதா பாஜக?!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.