தருமபுரியில் மகனுக்கு பூச்சி மருந்து கொடுத்து கொன்ற வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை!

தருமபுரியில் மகனுக்கு பூச்சி மருந்து கொடுத்து கொன்ற வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை!
Dharmapuri Court: தருமபுரி அருகே குடும்பத் தகராறு காரணமாக பூச்சி மருந்து கொடுத்து மகனைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (42). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், ஷகிரா என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்று, இந்த தம்பதியினருக்கு சந்தர் (5), லூர்து என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்துள்ளனர்.
இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக முரளி - ஷகிரா இருவரும் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்படவே, மீண்டும் சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்து இணைந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் இவர்களுக்கு இடையே தகராறு வெடித்துள்ளது.
இதில், இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் இன்று மீண்டும் பிரிந்த நிலையில் கணவர் முரளி மனமுடைந்துள்ளார். இதன் காரணமாகக் கடந்த 24.8.2017 அன்று இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் பூச்சி மருந்து கொடுத்துவிட்டு, முரளியும் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி மகன் சந்தர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பொம்மிடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தருமபுரி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கு விசாரணையானது முடிவடைந்து உள்ளது.
இதில், தந்தை முரளி தான் மகனைக் கொலை செய்தார் என்பது உறுதியானதை அடுத்து, இந்த கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட முரளிக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலை முயற்சி வழக்கில் 5 வருடம் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், தற்கொலை முயற்சி வழக்கில் 1 வருடம் சிறைத் தண்டனை என ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மோனிகா தீர்ப்பு வழங்கினார்.
