ஆன்லைன் கேமால் வந்த வினை - நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் தற்கொலை

author img

By

Published : May 12, 2022, 8:04 PM IST

நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் தற்கொலை

தர்மபுரி அருகே ஆன்லைன் கேம் விளையாடி 50 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை இழந்த இளைஞர் மன உளைச்சலில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி: ஆன்லைன் விளையாட்டில் பணத்தை கட்டி இழந்த 20 வயது இளைஞர் மனவிரக்தியில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். நல்லம்பள்ளியை அடுத்துள்ள குரும்பட்டி மாரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி.

இவரது மகன் வெங்கடேஷ் (20). இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் மூன்று வருடங்களாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்காக அவருடைய தந்தை வெங்கடேஷுக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். முதலில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பாடங்கள் சம்பந்தமான குறிப்புகள் உள்ளிட்டவற்றை எடுத்து படிப்பதில் தீவிரம் காட்டி வந்த வெங்கடேஷ் நாளடைவில் கேம்கள் விளையாடுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

இந்த ஆர்வம் பணம் கட்டி கேம்கள் விளையாடும் நிலைக்கு சென்றது. தொடர்ந்து விளையாடியதில் தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் அவர் இழந்தார். மேலும், தொடர்ந்து விளையாடுவதற்கு பணம் இல்லாததால் வீட்டிலிருந்த நகையை எடுத்து தனியார் நகை அடகு கடையில் அடகு வைத்து அந்த பணத்தில் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளார்.

அப்போது அதில் 50 ஆயிரம் ரூபாயை வரை இழந்துள்ளார். இதனால், மனவிரக்தியில் இருந்த வெங்கடேஷ், கடும் மன உளைச்சலில் கடந்த 7ஆம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அவரது பெற்றோர், சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடந்த ஐந்து நாள்களாக அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கபட்டு வந்த நிலையில் வெங்கடேஷ் நேற்று (மே11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவர்களது கையில் இருக்கும் செல்போனை படிப்பதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும், தீய போக்கில் அதனை பயன்படுத்தக்கூடாது என காவல் துறையினர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: வினையான வாட்ஸ்அப், சிக்கிய பெண் ஐஏஎஸ்.. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திடீர் திருப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.