அரசு பேருந்தில் நடத்துநர் மரணம்; கடலூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் சாலை மறியல்

அரசு பேருந்தில் நடத்துநர் மரணம்; கடலூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் சாலை மறியல்
மேல்மருவத்தூரில் அரசு பேருந்து நடத்துநர் அடித்து கொலை செய்த சம்பவத்தை அடுத்து கடலூரில் போக்குவரத்து ஊழியர்கள் சம்பந்தபட்டவரை கைது செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
கடலூர்: மேல்மருவத்தூரில் நேற்று (மே13) அரசு பேருந்தில் பயணி ஒருவர் குடிபோதையில் பேருந்து நடத்துநர் பெருமாள் என்பவரை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து, இந்த சம்பவத்திற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. இதுபோன்று தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாகவும் இதனால், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியில் இருப்போருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.10 லட்சம் போதாது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். அத்துடன் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்; குற்றவாளியை கைது செய்யக் கோரி, கடலூர் அரசு பணிமனையில் பேருந்துகளை இயக்காமல் புறக்கணித்து பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அனைவரையும் பணிமனைக்குள் அனுப்பினர். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் ரூபாய் நிவாரணம்
