கடலூர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவு..!

author img

By

Published : Oct 21, 2022, 4:37 PM IST

கடலூர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவு

சிதம்பரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு கிராம மக்களுக்குக் கணக்கெடுப்பு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவு கொடுக்கப்பட்டதாக வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூர்: கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகக் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழகுண்டலபாடி, மடத்தான்தோப்பு, திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட நான்கு கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

மேலும் அங்கு இருக்கும் மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்ற வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அன்சூல்மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்ததால் கீழகுண்டலாபாடி, பெரம்பட்டு, அக்கரை, ஜெயங்கொண்டபட்டினம், மடத்தான்தோப்பு, திட்டுக்காட்டூர் ஆகிய கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து நானும் மாவட்டத்தின் கண்காணிப்பு அதிகாரி அன்சூல் மிஸ்ரா, மற்ற அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் எனக் கூறினார்.

அதிக அளவு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணத்தினால் இந்த கிராமத்தில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. கடந்த நான்கு, ஐந்து நாட்களாக அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு அரசு சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு அவர்களைக் கண்காணித்து வருகிறது.

இந்த பகுதிக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று முதலமைச்சர் எண்ணுகிறார். அந்த அடிப்படையில் இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் கொள்ளிடம் ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தின் போது கொள்ளிடம் ஆறு இரு பிரிவுகளாகப் பிரிந்து நடுவில் நான்கு கிராமங்களும் சூழப்பட்டு இரண்டு பகுதியிலும் தண்ணீர் அதிக அளவு வருவதால் கிராமத்திற்குள் செல்கிறது. இது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் அதிகளவு மழை பெய்து வருவதால் வரும் தண்ணீரைத் திறந்து விடக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கும், மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் பணியைத் துரிதப்படுத்தி உள்ளோம். இந்த கணக்கெடுப்பின்படி நிவாரணம் அரசு வழங்கும். அதே போன்று விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதனைக் கணக்கெடுத்து முழுமையாக அவர்களது வாழ்வாதாரத்துக்கு என்ன தேவையோ அதன் அடிப்படையில் கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

அதேபோல் இந்த பகுதியில் சாலை சதுப்பு நிறைந்த நிலம் பகுதி என்பதால் அடிக்கடி சேதம் ஏற்பட்டு வருகிறது. பொதுவாகச் சாலைகள் அமைத்தால் ஐந்தாண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சாலைகள் அமைக்கப்படும். அந்த விதிகளில் இந்த மாவட்டத்திற்குத் தளர்வு செய்யப்பட்டு சாலையைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த கோரிக்கையை மாவட்டத்தின் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

கொள்ளிடம் ஆறு இரண்டாகப் பிரிந்து வருவதால் அதன் ஒரு பகுதியைத் தடுத்து தண்ணீர் உள்ளே வராமல் தடுப்பதற்கு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்

இதையும் படிங்க:மீனவர்களை இந்திய கடற்படையே தாக்கியது வருந்தத்தக்கது - தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.