தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு என தனி காப்பீடு திட்டம் - அமைச்சர் மெய்யநாதன்

author img

By

Published : Aug 2, 2022, 2:33 PM IST

அமைச்சர் மெய்யநாதன்

விளையாட்டு வீரர்களுக்கு என தனி காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

கடலூர்: பண்ருட்டி அடுத்த புறங்கணி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் விமல்ராஜ் கடந்த 25 ஆம் தேதி கபடி விளையாட்டின்போது களத்திலேயே உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு சக விளையாட்டு வீரர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவத்தை அறிந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கபடி வீரர் விமல்ராஜின் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று (ஆக.2) விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கபடி வீரர் விமல்ராஜ் வீட்டுக்கு சென்று திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி றுதல் தெரிவித்தார். பின்னர் முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதி 3 லட்சத்திற்கான காசோலையை விமல்ராஜின் பெற்றோர்களிடம் வழங்கினார்.

மேலும் அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சொந்த நிதியில் இருந்து 2 லட்சம் வழங்கினார். அப்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கபடி வீரர் விமல்ராஜின் திருஉருவப்படம் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் 2 நிமிடம் மொளன அஞ்சலி செலுத்தினர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெய்யநாதன், 'உயிரிழந்த கபடி வீரர் விமல்ராஜின் குடும்பத்திற்கு அரசு சார்பில் மாற்று குடியிருப்பு ஏற்பாடு செய்து தொகுப்பு வீடு வழங்கப்படும். இனி விளையாட்டு வீரர்களுக்கான காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும்' எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பண்ருட்டியில் விளையாடும்போது களத்திலேயே உயிரிழந்த கபடி வீரர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.