கொள்ளிடம் வெள்ளப்பெருக்கு: இழப்பீடு வழங்க பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!

author img

By

Published : Aug 8, 2022, 11:30 AM IST

Updated : Aug 8, 2022, 11:40 AM IST

கொள்ளிடம் வெள்ளப்பெருக்கு: இழப்பீடு வழங்க பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!

கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதித்த விளை நிலங்களுக்கு சரியான இழுப்பீட்டு தொகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொள்ளிடம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவேரி உபரி நீர் கொள்ளிடம் வழியே கடலில் கலக்கிறது.

இந்த தண்ணீரை தடுத்து மேட்டூருக்கு மேலே கிருஷ்ணகிரி மாவட்ட வன எல்லையில் அமைந்திருக்கும் ராசி மணலில் புதிய அணை கட்டி, 64 டிஎம்சி தண்ணீரை தேக்கினால், மேட்டூரில் தண்ணீர் குறையும்போது மேட்டூர் வழியாக பாசனத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

ஆனால் மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இதற்கான திட்டமிடல் நடவடிக்கை தொடங்க வேண்டும். கொள்ளிடம், நாமக்கல் தொடங்கி காவிரியில் வரும் உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலக்கும் இந்த சிதம்பரம் வரை, வழியோரத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான கிராமங்கள் அடியோடு அழிந்திருக்கிறது.

இப்பகுதியில் விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் பேராம்பட்டு மடத்தான் தோப்பு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் பல கிராமங்களில் பருத்தி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த நிலப்பகுதியில் இருக்கிற பாதிப்புக்கு ஏற்ப உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் குறுவை காப்பீடு செய்வதற்கு தமிழ்நாடு அரசு மறுத்ததால் பயிர் செய்துள்ள விவசாயிகள் மனம் உடைந்துள்ளனர். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் இழப்பீடு வழங்கப்படும் என்று சொல்கிறார்களே தவிர, அதற்கான தொகையை அறிவிப்பதில்லை.

கொள்ளிடம் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார்
கொள்ளிடம் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார்

இது விவசாயிகளை வைத்து நடிக்கிற செயலாகும். கடந்தாண்டு நடந்த அதே நிகழ்வு இந்த ஆண்டும் நிகழ்ந்து வருகிறது. மறைமுகமாக திட்டமிட்டு விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு காப்பீடு செய்தால் 35,000 ருபாய் வரை பெற முடியும். காப்பீடு திட்டத்தை அபகரித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர்தான் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கொள்ளிடம் பகுதிகளில் உள்ள முகத்துவாரங்களில் கதவணைகளை அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக கடலில் கலக்கும் இந்த தண்ணீரை, கொள்ளிடத்தில் 10 கிலோமீட்டருக்கு ஓர் இடத்தில் கதவணை அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். கொள்ளிடம் பாசன விவசாயிகளை அவர்களின் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க, காப்பீடு திட்டத்தை முழுமையாக இப்பகுதியின் பாதிப்புக்கு ஏற்ப செயல்படுத்தி இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

கல்லணை முதல் சிதம்பரம் வரையிலும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து கதவணைகள் கட்ட வேண்டும். நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் வாழை உள்ளிட்ட காய்கறிகள் தோட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட மயிலாடுதுறை மாவட்டம் வரை நெல் சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் முகத்துவாரமாக இருக்கிற கீழணைக்கு கிழே இருக்கிற பகுதியில் கிட்டத்தட்ட வாழை, சோளம், பருத்தி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிப்புக்கு ஏற்ப வெளிப்படையாக நிலத்தின் பரப்பளவை அறிவித்து, அதற்கான இழப்பீட்டுத் தொகையை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: கொள்ளிடம் வெள்ளப்பெருக்கு: நீரில் மூழ்கிய பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

Last Updated :Aug 8, 2022, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.