ETV Bharat / state

ஒட்டகப் பாலில் டீ வேணுமா? கோவைக்கு வாங்க!

author img

By

Published : Mar 21, 2022, 4:36 PM IST

Updated : Mar 21, 2022, 10:36 PM IST

நகைச்சுவை நடிகர் வடிவேலு சொன்னது போல் கோவையில் உண்மையிலேயே ஒட்டகப் பாலில் டீ விற்பனை செய்யப்படுகிறது.

ஒட்டகப் பாலில் டீ வேணுமா?
ஒட்டகப் பாலில் டீ வேணுமா?

கோயம்புத்தூர்: 'வெற்றிக்கொடி கட்டு' திரைப்படத்தில் துபாய்க்கு சென்று திரும்பிய நடிகர் வடிவேலு, தனக்கு ஒட்டகப் பாலில் தான் டீ வேண்டும் என்று டீ கடை ஊழியரை தாக்குவது போன்ற நகைச்சுவைக் காட்சி இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில் உண்மையிலேயே தென் இந்தியாவில் முதல் முறையாக கோவையில் ஒட்டகப் பாலில் டீ விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பார்சல் சர்வீஸ் நடத்தி வந்த இவர் அண்மையில் கரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க ஒட்டகப் பால் குடித்தால் நன்மை என அறிந்து, ஒட்டகப் பால் வாங்கி குடித்து வந்ததுடன், ஒட்டக பால் குறித்து பதிவுகளையும் படித்து வந்துள்ளார்.

ஒட்டகப் பாலில் டீ வேணுமா?

ஒட்டகப் பாலில் டீ

அதில் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக ஒட்டகப் பால் இருப்பதை அறிந்த மணிகண்டன், தன்னை போல் மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என எண்ணி ஒட்டகப் பால் பண்ணையை ஆரம்பிக்க முடிவு செய்தார்.

அரசு அனுமதிபெற்று குஜராத் பகுதியில் இருந்து 6 ஒட்டகம் கொண்டு வந்து, நீலாம்பூரை அடுத்த குளத்தூர் பகுதியில் சங்கமித்ரா என்ற பெயரில் ஒட்டகப் பண்ணை அமைத்து பால் விற்பனை செய்து வருகிறார். இது தவிர ஒட்டகத்தை காண வரும் மக்களை கவர்வதற்காக அங்கேயே குதிரை, முயல், வாத்து, மீன்களை வளர்த்து வருகிறார்.

ஒட்டகப் பால் பண்ணை

இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டேன். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒட்டகப் பால் அருந்தினால் நன்மை என தெரிந்ததை அடுத்து வெளிமாநிலத்தில் இருந்து ஒட்டகப் பால் வாங்கி குடித்து வந்தேன்.

கரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் செல்போன் மற்றும் டிவியில் அதிக கவனம் செலுத்தி வந்த நிலையில், அதனை தவிர்க்கும் வகையில் வீட்டில் முயல், மீன், ஆடுகள் வளர்த்து குழந்தைகளின் கவனத்தை ஈர்க்க செய்தேன்.

தொடர்ந்து, ஒட்டகப் பாலின் நன்மையை தெரிந்து கொண்ட பின்னர் இங்கேயே ஒட்டகப் பால் பண்ணை அமைக்க முடிவு செய்தேன். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அரசு அனுமதி பெற்று ஆறு ஓட்டங்களை வாங்கி வந்து பண்ணை அமைத்துள்ளேன்.

ஒட்டகப் பால் லிட்டர் 450 ருபாய்க்கு விற்பனை செய்கிறேன். ஒட்டகப் பாலில் டீ, காபி, ரோஸ்மில்க் ஆகியவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன். சர்க்கரை நோயாளிகள் ஒட்டகப் பால் குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

அதற்கான மருத்துவச் சான்று என்னிடம் உள்ளது. ஒட்டகத்தை பார்வையிட வருபவர்கள் குதிரை சவாரியும் செய்யலாம். இதற்கான அனுமதி சீட்டு பெரியவர்களுக்கு 20 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது" என்றார்.

பொழுதுபோக்கு இடம்

இதுகுறித்து வாடிக்கையாளர் காவியா கூறுகையில், "ஒட்டகப் பாலில் டீ, காபி ஆகியவை விற்பனை செய்வதாக கேள்விப்பட்டு வந்தோம். ஒட்டகங்களை நேரில் பார்ப்பதால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதுதவிர முதல் முறையாக ஒட்டகப் பாலில் டீ குடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குதிரைகள், முயல், மீன்கள் என அனைத்தையும் பார்வையிடுவதால் பொழுதுபோக்கு இடத்திற்கு வந்ததுபோல் உள்ளது" என்றார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

பால் பண்ணையை விரைவில் தமிழ்நாடு முழுவதும் அமைக்க திட்டமிட்டு, குஜராத் மாநில ஒட்டக ஆராய்ச்சியாளருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் மணிகண்டனின் முயற்சி வரவேற்க்கத்தக்கது.

இதையும் படிங்க: தாலிக்குத் தங்கம் திட்டத்தை மாற்றியது ஏன்? - நிதியமைச்சர் விளக்கம்

Last Updated : Mar 21, 2022, 10:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.