கோவை மாவட்ட பாஜக தலைவர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு!

author img

By

Published : Sep 22, 2022, 10:25 PM IST

Etv Bharat கோவை மாவட்ட பாஜக தலைவர்

பெரியார், முதலமைச்சர் ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசியதாக கோவை மாவட்ட பாஜக தலைவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக துணைப்பொதுச்செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுபேசினார். அப்போது, இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர். ஆ. ராசாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்கக்கோரி பாஜக, இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கடந்த 18ஆம் தேதியன்று நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ. ராசாவை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக கோவை மாவட்டத்தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, பெரியார், முதலமைச்சர் ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோரை கொச்சைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் பேசியதாக குறிப்பிட்டுள்ளனர்.

பாலாஜி உத்தமராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் மற்றும் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இந்நிலையில் பாஜக கோவை மாவட்டத்தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மீது பீளமேடு காவல் துறையினர் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று (செப்.21) அதிகாலையில் அவரை வீட்டில் இருந்து பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப்பின்னர் பாலாஜி உத்தம ராமசாமியை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தி 15 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைதடுப்புச்சட்டத்தின் கீழ் பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆ. ராசாவை இழிவுபடுத்தி பேசியதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், கூடுதலாக வன்கொடுமை பிரிவைச் சேர்த்து கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆவணங்களை காவல் துறையினர் தாக்கல் செய்தனர். இதையடுத்து இவ்வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க: மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் - விஷயம் என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.