'தீராக் காதல்' - ஒற்றை ஆளாக யானைகளை விரட்டும் 'சிங்கப் பெண்'!

author img

By

Published : Jan 14, 2022, 8:11 PM IST

ஒற்றை ஆளாக காட்டு யானையை விரட்டுவது குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய ராதா.

கணவர் மீது கொண்ட அன்பால், குடும்பச் சூழல் கருதி நாள்தோறும் தன்னந்தனியாக இரவில் காட்டு யானைகளை விரட்டும் மூதாட்டி குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் காணலாம்.

கோவையில் மனித - விலங்கு மோதல் என்பது சமீப காலமாகவே அதிகரித்துவருகிறது. இதற்கு வனப்பகுதியில் நிலவும் உணவு, நீர்ப் பற்றாக்குறையே முக்கியக் காரணியாக உள்ளது. தங்களது வழித்தட ஆக்கிரமிப்புகளாலும் இரவு நேரங்களில் ஊருக்குள் காட்டு யானைகள் நுழைகின்றன.

காட்டு யானைகளை விரட்ட வனத் துறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளும் பலனளிக்காததால், காட்டு யானைகளை விரட்ட விவசாயிகள் திணறிவருகின்றனர். காட்டு யானைகளுக்குப் பயந்து மலையடிவார விவசாயிகள் விவசாயத்தையே விட்டுச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

விவசாயக்கூலி - குத்தகை

இந்நிலையிலேயே விவசாயத்தையும், தனது குடும்பத்தையும் காப்பாற்ற தன்னந்தனியாக களமிறங்கியிருக்கிறார் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராதா (67). கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ராதா - அப்பு தம்பதியினர் கேரளாவிலிருந்து விவசாயக் கூலிகளாக கல்லாரிலுள்ள தனியார் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லையால் விவசாயத்தையே விட்டுவிட முடிவு செய்திருக்கிறார் இவர்களது முதலாளி. பின்னர் விவசாயத்தின் மீது இத்தம்பதியினருக்கிருந்த தீராக் காதலைக் கண்டு, விவசாய தோட்டத்தை இவர்களுக்கே குத்தகைக்கு கொடுத்துள்ளார்.

ஒற்றை ஆளாக காட்டு யானையை விரட்டுவது குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய ராதா

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்புவிற்கு மாரடைப்பு ஏற்படவே, குடும்பத்தை கவனிக்கும் மொத்த பொறுப்பும் ராதாவிடம் வந்துள்ளது. இதனையடுத்து தனியொருவராக விவசாயத்தையும், காவல் பணியையும் செய்யத் தொடங்கியுள்ளார் ராதா.

விடிய விடிய காவல் பணி

பகல் முழுவதும் விவசாய பணிகளில் ஈடுபட்டுவிட்டு, மாலையில் பரண் மீது ஏறி யானைகள் வருவதைக் கண்காணிக்கத் தொடங்குகிறார். தனது தோட்டத்தின் அருகே வரும் காட்டு யானைகளைச் சத்தம் எழுப்பி விரட்டத் தொடங்கிவிடுகிறார்.

இது குறித்து ராதா பேசுகையில், “ஆரம்பத்தில் கணவர் அப்புவுடன் இணைந்து விவசாய பணியையும், இரவில் யானைகளையும் விரட்டிவந்தேன். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தற்போது நான் மட்டும் தனியாக யானைகளை விரட்டிவருகிறேன்.

யானைகள் வரும் சமயத்தில் பரண் மீது ஏறி தீவட்டி வெளிச்சம் காண்பித்து, "போ சாமி, விநாயகரே போயிரு, நாங்க ஏழைங்க, எங்க தோட்டத்தை நாசம் பண்ணுறியே" எனச் சொன்னால் யானைகள் சென்றுவிடும் என்பது எனது நம்பிக்கை.

காவல் பணி பெரிய சிரமத்தைக் கொடுப்பதில்லை, யானை வரும் நேரத்தைக் கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் செயல்பட்டால் சேதங்களைத் தடுக்க முடியும். அப்படியிருந்தும் ஒரு சில யானைகள் தோட்டத்துக்குள் புகுந்துவிட்டால் பயிர்ச்சேதம் அதிகமாகும்” என்றார்.

தன்னம்பிக்கையில் மிளிரும் ராதா

கணவர் மீது கொண்ட அன்பால் தன்னந்தனியாக விவசாயத்தில் சாதித்து பொருளாதாரத்தில் முன்னேற நினைக்கும் ராதாவின் செயல் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தனது மனைவியின் காவல் பணி குறித்து அப்பு பேசுகையில், “அண்மையில் எனக்கு உடல்நலம் குன்றியது. அடுத்து என்ன செய்யப் போகிறோம்? என யோசிப்பதற்குள்ளாகவே, இரவில் காவலுக்குச் சென்று யானைகளை விரட்டுவதாகத் தைரியம் ஊட்டினாள் ராதா. அன்றாடமும், யானை விரட்ட காவலுக்குச் சென்ற ராதாவிற்கு, யானை மீதான பயமே போய்விட்டது. ஒரு போதும் ராதாவை யானைகள் தாக்க முயற்சிக்கவில்லை” என்றார்.

இன்றைய காலகட்டத்தில் விவசாயம் முதல் விண்வெளிவரை என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அந்த வரிசையில் தனது கணவரின் மீது கொண்ட தீராக் காதலால், குடும்பத்தைக் காப்பாற்ற நாள்தோறும் விடிய விடிய யானை காவலில் தன்னந்தனியாக ஈடுபடும் ராதாவும் சிங்கப்பெண்தான்!

இதையும் படிங்க: குழந்தைகளிடம் பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.