பொள்ளாச்சியில் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவர் கைது!

பொள்ளாச்சியில் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவர் கைது!
Pollachi Crime: பொள்ளாச்சியில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை பொள்ளாச்சி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி புதுக்காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற டேவிட் (34). பெயிண்டிங் தொழிலாளியான இவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கற்பகம் (33) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆறுமுகத்துக்கும், கற்பகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து ஆறுமுகம் தனது மனைவியைப் பிரிந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில வாரமாக பொள்ளாச்சி பகுதியில் பெயிண்டிங் வேலைக்காக சென்று வந்த ஆறுமுகம், தொப்பம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, கற்பகத்திடம் அவருடன் சேர்ந்து வாழுமாறு ஆறுமுகம் வலியுறுத்தி வந்துள்ளார். இதற்கு கற்பகம் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கம்போல் சம்பவம் நடந்த அன்று இரவு வேலையை முடித்துவிட்டு தொப்பம்பட்டியில் உள்ள தனது மனைவி கற்பகத்தின் வீட்டிற்கு ஆறுமுகம் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவருமிடையே தகராறு முற்றிய நிலையில், வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக வெட்டிக் கொலை; நெல்லையில் தொடரும் கொலை குற்றங்கள்.. போலீசாரின் நடவடிக்கை என்ன?
அப்போது ஆத்திரமடைந்த ஆறுமுகம், கத்தியால் கற்பகத்தை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் கற்பகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மகாலிங்கபுரம் காவல் துறையினர், கற்பகத்தின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து பொள்ளாச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் பிருந்தா அறிவுறுத்தலின்படி, காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையில் காவல் துறையினர், தலைமறைவான ஆறுமுகத்தை பல்லடத்தில் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஆறுமுகத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
