கோவையில் யானை தாக்கி விவசாயி படுகாயம்

author img

By

Published : Sep 26, 2021, 6:53 AM IST

யானை தாக்கி விவசாயி படுகாயம்

கோயம்புத்தூர் காட்டுப் பகுதியில் இருந்து விவசாய நிலத்திற்கு புகுந்த யானை தாக்கியதில் விவசாயி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோயம்புத்தூர்: வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று, ஆலாந்துறை அடுத்த சப்பணிமடை பகுதியில் இருக்கும் பழனிசாமி என்பவரது தோட்டத்தில் புகுந்துள்ளது. அப்போது காவல் பணியில் இருந்த பழனிசாமி யானையை பட்டாசு வெடித்து விரட்டியுள்ளார்.

இதனையடுத்து அவர் அங்கிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும்போது, மறைவில் இருந்து வெளியேறிய யானை பழனிசாமியை தும்பிக்கையால் தாக்கி தூக்கி வீசியது. அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து, சத்தம் எழுப்பி யானையை விரட்டினர்.

வனத்துறையினரின் அறிவுரை

தொடர்ந்து விவசாயி பழனிசாமியை மீட்ட அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதன் பின்னர், வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதுகுறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் யானைகள் புகும்போது வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களாக யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இரவு, அதிகாலை நேரங்களில் யாரும் அவசியமின்றி வெளியே வரக்கூடாது" என அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.