விவசாயப் பயிர்களை தாக்கும் பறவைகளை விரட்ட ரோபோ பறவை.. கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு!
Published: May 22, 2023, 10:50 PM


விவசாயப் பயிர்களை தாக்கும் பறவைகளை விரட்ட ரோபோ பறவை.. கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு!
Published: May 22, 2023, 10:50 PM
விவசாயப் பயிர்களை பறவைகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ரோபோடிக் பறவை ஒன்றை உருவாக்கியுள்ளனர். அது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பைக் காணலாம்..
கோயம்புத்தூர்: மாறி மாறி பெய்து வரும் பருவ மழை மற்றும் விவசாயத்திற்கான ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டப் பல்வேறு பிரச்னைகளை எதிர் கொண்டு விவசாயத்தை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருந்து வரும் பிரச்னைகளில் ஒன்று பறவைகள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகள் தான். பல இடங்களில் பறவைகள் கூட்டமாக வந்து விளைபொருட்களை நாசம் செய்வது காலம் காலமாக விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளில் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.
பழங்கால முறைகளைப் பின்பற்றி பறவைகளை விரட்டும் பணியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தபோதும் முழுமையாக தீர்வு கிடைக்காமல் விவசாயிகள் தடுமாறி வந்தனர். இது போன்ற பிரச்னையிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி ஏவியேஷன் மற்றும் ரோபாட்டிக்ஸ் கிளப் மாணவர்கள் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பு விவசாயிகள் இடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பறவைகளின் அளவில் சிறிய ரக ரோபோட்டிக் பறவைகளை இந்த மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து பொறியியல் மாணவர்கள் கூறுகையில், “தங்கள் கல்லூரியின் பேராசிரியர் அறிவழகன் தலைமையில் ஏராளமான டிரோன்களை பொறியியல் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளோம். மெக்கானிக், எலக்ட்ரானிக் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய டிரோன்கள் மணிக்கு 200 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது. 200 கிராம் முதல் 10 கிலோ வரை எடையுள்ள டிரோன்களை உருவாக்கியுள்ளோம். விவசாய நிலங்களில் மருந்து தெளிக்கும் வகையிலும் டிரோன்களை உருவாக்கியுள்ளோம்.
இவைகளின் சிறப்பு வாய்ந்ததாகவும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பறவை வடிவிலான ரோபோடிக்கை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் அறுவடை சமயங்களில் பறவைகளால் விவசாய நிலங்களில் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்க முடியும்” என மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், சோதனை முயற்சியாக இதனை விளை நிலங்களில் பயன்படுத்திய போது பறவைகளின் எண்ணிக்கை குறைந்து நல்ல விளைச்சல் கிடைத்ததாக தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு நாட்டின் பல்வேறு முக்கிய அறிவியல் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டு ஏராளமான பரிசுகளை குவித்துள்ளது. தற்போதைக்கு இவை சந்தையில் கிடைக்காது என்ற போதும் விரைவில் இதனை சந்தைப்படுத்தி அதிக அளவில் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இதனை கண்டுபிடித்த மாணவர்களான ஜவகர் பாலாஜி மற்றும் சுகன் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை இந்தியா முழுவதும் நடைபெற்ற டிரோன் போட்டிகளில் ஐஐடி, என்ஐடி கல்லூரிகளை பின்னுக்குத் தள்ளி முதல் பரிசுகளை பெற்றுள்ளதாகவும், முதலாம் ஆண்டு மாணவர்கள் முதல் இறுதி ஆண்டு மாணவர்கள் வரை போட்டியில் பங்கேற்று 10 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகை பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர். அரசுகள் விவசாயத்தைப் பாதுகாக்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் மாணவர்கள் தற்போது கண்டறிந்துள்ள இந்த ரோபோடிக் பறவை ஒரு நல்ல கண்டுபிடிப்பாக வருங்காலத்தில் உயரும் என்கிற நம்பிக்கை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே இருந்து வருகிறது. தாங்கள் கற்கும் கல்வியின் மூலமாக இந்த சமூகத்திற்கு உதவ வேண்டும் என்கிற நோக்கில் மாணவர்கள் கண்டறிந்துள்ள இந்த ரோபோடிக் பறவைக்கு மத்திய மாநில அரசுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: பிளம்பர், கொத்தனார், ஓட்டுநர் தேவையா? - வருகிறது தமிழக அரசின் 'செயலி'
