ETV Bharat / state

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா?

author img

By

Published : Jul 18, 2021, 11:07 PM IST

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில், உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா?
வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படுமா?

சென்னை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட 115 சமூகங்கள் அடங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், வன்னியர்களுக்கென தனியாக 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தி, பாமக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து அரசு ஆணையிட்டது.

வன்னியர் உள்ஒதுக்கீடு நிறைவேற்றம்

அரசிதழில் வெளியான அறிவிப்பு
அரசிதழில் வெளியான அறிவிப்பு
இந்த நிலையில் 15ஆவது சட்டப்பேரவையின் இறுதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தச்சட்டப்பேரவையின் கூட்டத்தாெடரில் 26ஆம் தேதி மாலையில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னர் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , வன்னியர்களுக்கு தனியாக 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டமசோதா கொண்டு வந்து நிறைவேற்றினார்.
மேலும் அந்த சட்டமசோதாவிற்கு 2021 பிப்ரவரி 26ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, அரசிதழிலிலும் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்தச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும் முறைப்படி சட்டத்தை அமல்படுத்தும் பணியில் அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என உயர் கல்வித்துறை துணைச் செயலாளர் மோகன்ராமன் 2021 ஏப்ரல் 1ஆம் தேதி அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

திமுக ஆட்சியில் வன்னியர் ஒதுக்கீடு எவ்வாறு இருக்கும்?

இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்த உடன் வன்னியர் இடஒதுக்கீடு குறித்து சர்ச்சை கிளம்பியது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு தனது உரையை நிகழ்த்தினார்.
அந்த உரையின் மீது நடைபெற்ற விவாதத்தில் ஜூன் 23ஆம் தேதி பேசிய சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ள 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கெனவே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பியிருக்கிறார். அதிலே இதனுடைய முக்கியத்துவத்தையும், இதிலுள்ள பிரச்னைகளை எல்லாம் எடுத்துக்கூறி, நிறைவாகக் குறிப்பிடுகிறபோது, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு சட்டம் எண் 8/2021-ஐ விரைந்து செயல்படுத்தும்படியும், அதற்குத் தேவையான அரசாணைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உடனடியாகப் பிறப்பிக்கும்படியும் கேட்டிருக்கிறார். இது குறித்து சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய துறையினுடைய அலுவலர்களோடு விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற ஸ்டாலின் உறுதிபட கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 51 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு நாளை உடன் முடிவடைகிறது. ஆனால், கலந்தாய்வினை நடத்துவதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.

வெளியிடப்படாத அரசாணைகள்

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அரசாணைகள் பிறப்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்படோர் நலன் மற்றும் சீர் மரபினர் நலத்துறை, மனித வள மேலாண்மைத்துறை ஆகியவற்றில் இருந்து அரசாணைகள் வெளியிடப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது.

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு குறித்து அரசு தெளிவான முடிவினை அறிவித்தால் தான் உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த முடியும் என்ற சூழ்நிலை நிலவி வருவதாகத் தெரிகிறது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டுச் சட்டத்தை திமுக ஆட்சியில் நிறைவேற்றுவார்களா? என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்க தடை விதிக்க முடியாது - மறுத்த உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.