ETV Bharat / state

விஜயதசமி நாளன்று கோயில்கள் திறப்பு? - உயர் நீதிமன்றத்தில் மனு

author img

By

Published : Oct 11, 2021, 12:08 PM IST

வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) விஜயதசமி நாளன்று கோயில்களைத் திறக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கிற்கான மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் மனு
உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆர். பொன்னுசாமி என்பவர் தாக்கல்செய்துள்ள மனுவில், "கரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்றைய நாள் கோயில்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்துள்ளார்.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை அனுமதிக்கும் அரசு, நவராத்திரி நாள்களின் முக்கியத்துவத்தைக் கருதி துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனத்தைப் புரிந்துகொள்ளாமல் கோயிலைத் திறக்காமல் இருப்பதாக மனுவில் தனது தரப்பு நியாயத்தை எடுத்துவைத்துள்ளார்.

ஏற்கனவே வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விஜயதசமி நாளன்று தரிசனத்திற்காகக் கோயில்களைத் திறக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் அவர் கூறியுள்ளார்.

இந்த மனு இன்று (அக். 11) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை நாளை (அக். 12) நீதிபதிகள் ஆர். மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: ஜெயப்பிரகாஷ் நாராயண் 119ஆவது பிறந்தநாள் - பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.