திரிபுரா வன்முறை; பாஜகவிற்கு எதிராக விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Nov 23, 2021, 7:21 PM IST

VCK

திரிபுராவில் இடதுசாரிகள், இஸ்லாமியர்கள் மீதான வன்முறையை கண்டித்து இன்று (நவ.23) மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை : திரிபுரா மாநிலத்தில் இஸ்லாமியர்கள், இடதுசாரிகள் மீது பாஜக வன்முறையை கட்டவிழ்த்து தாக்குதல் நடத்தி வருகிறது, அங்கு அமைதி இல்லை. தொடர்ந்து பாஜக அரசு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் சிலைகளை உடைத்து, கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இடதுசாரிகள், இஸ்லாமியர்கள் மீதான வன்முறையை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொல். திருமாவளவன் பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "வங்க தேசத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை முன்னிறுத்தி அங்குள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டிப்பதாக கூறி, எவ்வித தொடர்பும் இல்லாத திரிபுரா மாநிலத்தில் இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்த வன்முறையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதையடுத்து, திரிபுராவில் பாஜகவின் நடவடிக்கையை கண்டிப்பதாகவும், மனித உரிமை ஆர்வலர்கள் மீது போடப்பட்ட முறையற்ற வழக்குகளை திரும்ப பெற வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.
அவரைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், திரிபுரா மாநிலத்தில் பாஜக வன்முறையை தூண்டி இஸ்லாமிய மக்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹிட்லரை போல்...

நாடு முழுவதும் வன்முறை மூலமாக தங்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என தவறாக பாஜக நினைக்கிறது. ஹிட்லரை போன்ற மோசமான கொள்கைகளை தான் பாஜக கொண்டிருக்கிறது. இது அவர்களுக்கு தற்காலிக வெற்றியாக இருக்கலாமே, தவிர நிலையான தல்ல” என்றார்.

மேலும், ஹிட்லருக்கு ஏற்பட்ட நிலைமை அனைவருக்கும் தெரியும், ஹிட்லருக்கு ஏற்பட்டது போன்ற நிலை பிரதமர் மோடிக்கு ஏற்படக் கூடாது. ஏனென்றால் அவர் 130 கோடி மக்களின் பிரதமர் எனவும் கூறினார்.

கலந்துகொண்டவர்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி - திருமாவளவன் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.