தமிழ்நாடு பட்ஜெட் 2021-2022

author img

By

Published : Aug 13, 2021, 9:45 AM IST

Updated : Aug 14, 2021, 12:58 PM IST

தமிழ்நாடு இ-பட்ஜெட்

13:28 August 13

நிலுவையிலுள்ள பணத்தை வசூலிக்க சமாதான் திட்டம்

  • தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி விகிதத்தை அதிகரிப்பதே நாம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான சீர்திருத்தம் ஆகும்.
  • தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட பழைய வரிகளில் நிலுவையிலுள்ள 28 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க எளிமையாக அரசிற்குப் பலனளிக்கக்கூடிய விதமாக சமாதான் திட்டம் அறிவிக்கப்படும்.
  • மோசடியான ஆவணங்கள் மூலம் ஏமாற்றப்பட்ட உண்மையான உரிமையாளர்களின் துயரத்தை நீக்க 1908ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தைத் திருத்தி அத்தகைய ஆவணங்களின் பதிவை ரத்து செய்ய பதிவுத் துறை தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

13:20 August 13

கருவூலங்கள் விரிவுபடுத்தப்படும்

  • கருவூலங்கள் விரிவுபடுத்தப்பட்டு அரசு, உள்ளாட்சி அமைப்புகள் பணம் செலுத்தும் வங்கிகளாக மாற்றம் செய்யப்படும்.

13:12 August 13

100 நாள் வேலை 150ஆக அதிகரிப்பு

  • தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாள்கள் 100 நாள்களிலிருந்து 150 நாள்களாக உயர்த்தப்படும். அத்துடன் தினசரி ஊதியம் ரூ.273-யிலிருந்து ரூ.300ஆக உயர்த்தப்படும்.
  • மேலும் 1,622 கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்காக 400 கோடி ரூபாயில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.
  • கிராமப்புறங்களில் 1.27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

12:52 August 13

2021-2022ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு

  • மொத்த வருவாய் வரவுகளில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் பெரும்பகுதியாக உள்ளது. இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,35,641.78 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மதிப்பீடுகள் 2021-2022ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,26,644.15 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2021-2022ஆம் ஆண்டு ஒன்றிய வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நிர்ணயிக்கப்பட்ட 27,148.31 கோடி ரூபாய் அளவிலேயே மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2021-2022ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 14,139.01 கோடி ரூபாயாக வரி அல்லாத வருவாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12:46 August 13

பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்க ஆணை

  • பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை 3 ரூபாய் அளவிற்கு குறைக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.
  • இது மாநிலத்தில் உள்ள உழைக்கும் வர்க்கத்திற்கும் நடுத்தரக் குடும்பங்களுக்கும் பெரிய நிவாரணமாக அமையும். இதனால் ஆண்டுக்கு ஆயிரத்து 160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

12:42 August 13

வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தீர ஆராய்ந்து திட்டம்

  • வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து தீர ஆராய்ந்து திட்டம் செயல்படுத்தப்படும். அதேபோலவே விவசாய நகைக் கடன்களில் அடைமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம், தூய்மை சரியாகக் கணக்கிடப்படவில்லை.
  • எனவே இந்தக் கடன் தள்ளுபடியைத் தொடர்ந்து அனுமதிக்கும் பட்சத்தில் தவறு செய்தவர்கள் பலரும் பலனைப் பெறக்கூடிய வாய்ப்புகள் நிகழும். இந்த முறைகேடுகள் குறித்து தீர ஆராய்ந்து இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும்.

12:38 August 13

மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் ஏழ்மையானவர்களுக்கே!

  • பணியின்போது உயிரிழக்கும் பணியாளர்களுக்கு வழங்கும் மானியம் மூன்று லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதியதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் வழங்கப்படும்.
  • இந்த ஆண்டு நிதி நிலை காரணமாக அகவிலைப்படி உயர்வு இல்லை. குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் மாற்ற தேவையில்லை.
  • தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்து வழங்கப்படும். இத்திட்டத்தின் நோக்கம் நிதியுதவியை இல்லத்தரசிகளுக்கு வழங்குவதே ஆகும் என உறுதியளிக்கிறேன். இத்திட்டம் மிகவும் ஏழ்மையானவர்களுக்கான திட்டமாகும்.

12:36 August 13

மாநில நிரப்பரப்பில் 33% காடு, மரங்கள் அதிகரிக்கத் திட்டம்

  • தமிழ்நாட்டில் காடு, மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 விழுக்காடு அதிகரிப்பதற்காக தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது.
  • பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக முதலமைச்சர் தலைமையின்கீழ் 500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்று அமைக்கப்படும்.

12:31 August 13

ஒலிம்பிக்கில் விளையாடிய இருவருக்கு அரசு வேலை

  • இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டிற்காக 225.62 கோடி ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற 12 விளையாட்டு வீரர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது, இதில் இருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது.

12:28 August 13

முதலமைச்சரின் தொடர் நடவடிக்கையால் ஓபிசி-க்கு 27% வழங்க ஒன்றிய அரசு முடிவு

  • முதலமைச்சரின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் மூலம் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவுசெய்துள்ளது.
  • மசூதிகள், தேவாலயங்களைப் புதுப்பிப்பதற்காக தலா ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வக்புவாரிய சொத்துகள் பாதுகாக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளி பிரிவில் 9173 தகுதியுள்ள நபர்களுக்கு மாதத்திற்கு 1500 ரூபாய் வழங்க 404.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

12:24 August 13

மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு

மகப்பேறு கால விடுப்பு
மகப்பேறு கால விடுப்பு
  • பழங்குடியினர் திட்டத்திற்கு 1306.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு ஒன்பது மாதங்களிலிருந்து 12 மாதங்களாக அதிகரிக்கப்படும்.

12:17 August 13

சித்த மருத்துவம் மேம்படுத்தப்படும்

தமிழ்நாடு இ-பட்ஜெட் 2021
தமிழ்நாடு இ-பட்ஜெட் 2021
  • போதிய நிதி வசதி இல்லாத 12 ஆயிரத்து 959 திருக்கோயில்களில் ஒரு கால பூஜை செயல்படுத்த 130 கோடி நிலை நிதி ஏற்படுத்தப்படும். பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மூலம் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு சித்தர்களின் அறிவாற்றல் உடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்த மருத்துவம் மேம்படுத்தப்படும்.
  • பக்தர்களின் அனுபவத்தை அதிகரிப்பதற்கு 539 திருக்கோயில்களின் பெரும்  திட்டங்கள் அரசால் எடுக்கப்பட்டுவருகின்றன.
  • கன்னியாகுமரி, பூம்புகாரில் உள்ள திருவள்ளுவர் சிலை மேம்படுத்தப்பட்டு அவற்றின் பழம்பெருமை மீட்டெடுக்கப்படும். சுற்றுலாத் துறைக்கு 187.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மகளிர் கல்வி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்க 762.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். திருநங்கைகள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
  • 1071 கைவிடப்பட்ட திருநங்கையர் பயன்பெறும் வகையில் பாலின ஓய்வுத் திட்டத்திற்கு 1.50 கோடி கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கரோனாவால் பெற்றோரை இழந்த ஐந்தாயிரத்து 963 குழந்தைகள் கண்டறியப்பட்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ் 95.96 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது.
  • அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்துவதற்காகச் சிறப்பு ஒதுக்கீடாக 48.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதிய உணவுத் திட்டத்திற்கு 1725.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

12:14 August 13

சிப்காட் தொழிலாளர்களுக்கு மலிவான விலையில் வீடுகள்

  • சர்வதேச தொழில்நுட்பப் பூங்கா மூலம் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிப்காட் தொழிலாளர்களுக்கு மலிவான விலையில் வீடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். முதலில் சென்னை, கோவையிலும் பின்னர் மற்ற நகரங்களுக்கும் கொண்டுவரப்படும்.
  • ஒன்று முதல் எட்டாம் வகுப்புப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளுக்கு 409.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • துணிநூல் துறையில் கவனம் செலுத்துவதற்காக ஒரு தனி இயக்குநரகம் உருவாக்கப்படும். 600 மேற்பட்ட அரசு சேவைகள் மின்னணு முறையில் வழங்கப்படும்.

12:06 August 13

பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள்

  • நிதி நுட்பத் துறை வளர்ச்சிக்குத் தமிழ்நாட்டில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளன. அதனை முன்னெடுக்கும் வகையில் நிதி நுட்பக் கொள்கை ஒன்று வெளியிடப்படும். மேலும் வழிகாட்டி நிறுவனத்தில் இதற்கென பிரத்யேகமாக நிதி நுட்பப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு நிதி நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்.
  • சென்னையில் இரண்டு கட்டங்களாக தொழில்நுட்ப நகரம் அமைக்கப்படும். முதல்கட்டமாக நந்தம்பாக்கத்தில் இந்த நிதி நுட்ப நகரம் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
  • ஓசூர்-சேலம்-திருச்சி-கோயம்புத்தூரை இணைக்கும் வகையில் பாதுகாப்பு தொழில் துறை பெறுவதற்காக ஒன்றிய அரசு அறிவித்த போதிலும் அதற்கான ஒன்றிய அரசு உதவி குறைவாகவே உள்ளது.
  • கோயம்புத்தூரில் 500 ஏக்கர் பரப்பளவில் 225 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்புக் கருவிகள் கொண்ட உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும்.
  • தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள திருவண்ணாமலை, தர்மபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

11:59 August 13

தொழிற்துறையில் பின்தங்கிய மாவட்டங்களில் நில வங்கித் தொகுப்பு

ஸ்டாலினுடன் பிடிஆர்
ஸ்டாலினுடன் பிடிஆர்
  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதி வழங்க 215.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வழங்க 60 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
  • 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 110 சேவைகளும் ஒற்றைச்சாளர வலைவாசலின்கீழ் கொண்டுவரப்படும்.
  • தமிழ்நாட்டில் உள்ள தொழிற்துறையில் பின்தங்கிய மாவட்ட மையங்களைக் கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 45 ஆயிரம் அளவிலான நில வங்கித் தொகுப்பு ஏற்படுத்தப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் நான்காயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும்விதமாக 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு ஆயிரத்து 100 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயிரம் கோடி ரூபாய் அறைகலன்களுக்கு சர்வதேச பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
  • திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு மின் வாகன பூங்கா, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவச் சாதனங்கள் பூங்கா, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் பொருள்கள் உற்பத்திப் பூங்கா - மணப்பாறை, தேனி, திண்டிவனம் ஆகிய இடங்களில்  உணவுப் பூங்காக்களும் நிறுவப்படும்.

11:52 August 13

தமிழ்நாடு அரசு சித்தா பல்கலைக்கழகம்

  • தடுப்பூசி மிக அவசியம், எட்டு லட்சம் தேவை இருந்தும் 2.4 லட்சம் மட்டுமே தடுப்பூசி வருகிறது. போதுமான தடுப்பூசி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மக்களை தேடி மருத்துவம் என்னும் திட்டம் 257.16 கோடி ரூபாய் செலவில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
  • இலவச ஆம்புலன்ஸ் 1303 ஆக உயர்த்தப்பட்டு சேவை உயர்த்தப்படும். 741.91 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்யப்படும்.
  • தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டது; நிலமும் கண்டறியப்பட்டது.
  • தமிழ்நாடு அரசு சித்தா பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதற்கு இரண்டு கோடி ரூபாய் முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:49 August 13

புதிதாக 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள்

  • புதிதாக 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். 25 அரசு கலை கல்லூரிகளில் 10 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும். அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக விடுதிகள் கட்டப்படும்.
  • உயர் கல்வித் துறைக்கு 5369.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:44 August 13

ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி, டேப்லெட்!

  • பள்ளிக் கல்வித் துறைக்கு 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய அடைவு ஆய்வின் கணக்கின்படி கற்றல் விளைவுகளின் அடிப்படையில் தமிழ்நாடு முதல் மூன்று மாநிலத்திற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஆசிரியர்களுக்கு கண்காணிக்கக்கூடிய, ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகளும், டேப்லெட்டுகளும் 13.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி, விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும் நோக்குடன் மாதிரிப் பள்ளிகள் அமைந்துள்ள சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். கரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைக் குறைப்பதே அரசின் முதல் நடவடிக்கை.

11:41 August 13

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறு

தமிழ்நாடு வரவு செலவுத் திட்ட அறிக்கை
தமிழ்நாடு வரவு செலவுத் திட்ட அறிக்கை
  • தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது. 2,500 மெகாவாட் சந்தையில் வாங்கியே சமாளிக்கிறது.
  • தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தில் 4320 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே.
  • 2520 மெகாவாட் மின் உற்பத்தி செய்கின்ற 12 அலகுகள் 25 ஆண்டுகள் பழமையானவை; அவை விரைவில் மாற்றப்படும்.
  • வேளாண்மைக்கான இலவச மின்சாரம், வீட்டிற்கான மின்சாரம் வழங்குவதற்கான மாநிலங்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்கவும் 19,872.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:37 August 13

1000 புதிய பேருந்துகள், மெட்ரோ 2ஆம் கட்ட பணி விரைவில்

  • மாநிலத்தில் உள்ள வெண்பலகை கொண்ட நகரப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவசமாகப் பயணிக்க 703 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 750 கோடி ரூபாய் நீசல் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
  • 623.59 கோடி ரூபாய் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மெட்ரோ இரண்டாம் கட்ட கட்டுமானம் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. கோடம்பாக்கம்- பூந்தமல்லி இடையே 2025ஆம் ஆண்டில் மெட்ரோ சேவை தொடங்கும்.
  • மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்படும்.

11:32 August 13

புதிய குடிசை மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு கொள்கை

  • சென்னை நகர கூட்டமைப்புத் திட்டம் விரைவில் உலக வங்கி ஆசிய கூட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியுடன் தொடங்கப்படும்.
  • சென்னை நகரில் மூன்று இடங்களில் அதாவது கணேசபுரம் சுரங்கப்பாதையின் கொன்னூர் நெடுஞ்சாலை, ஸ்ட்ரான்ஸ் சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.
  • புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்களை மதுரை, கோவை, திருப்பூர், வேகமாக வளர்ந்துவரும் ஓசூர் பகுதிக்கு ஏற்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு மூன்று லட்சத்து 95 ஆயிரத்து 444 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • புதிய குடிசை மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வு கொள்கை வகுக்கப்படும். 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும்.
  • ரூ.17,899.17 கோடி நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:27 August 13

வெள்ளை அறிக்கைக்கு உரிய பதிலை தருவேன் - ஓ. பன்னீர்செல்வம்

வெள்ளை அறிக்கை குறித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில்,

  • "வெள்ளை அறிக்கைக்கு உரிய பதிலை நான் சட்டப்பேரவையில் தருவேன். ஏற்கெனவே நான் பத்து ஆண்டுகள் இருந்தபோது சொன்னதையும் சொல்லாதையும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி மேலாண்மையும் விவரமாக விரிவாகச் சட்டப்பேரவையில் உரிய நேரத்தில் தெரிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.

11:25 August 13

தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை

  • அடுத்த ஐந்தாண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.
  • மாநிலத்தில் உள்ள 79 ஆயிரத்து 395 கிராமங்களுக்கு தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

11:18 August 13

விடியாத அரசும் வெற்று அறிக்கையும் - விளாசும் இபிஎஸ்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி:

நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளைக் கூறி திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள். ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் ஆகியும் நீட் தேர்வை ரத்துசெய்யாமல் மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

  • நீட் தேர்வை ரத்து செய்யாத விடியா அரசைக் கண்டித்து வெள்ளை அறிக்கை என்னும் பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்டு உள்ளார் நிதி அமைச்சர். வெள்ளை அறிக்கை விளம்பரம் தேடும் முயற்சியே.

அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஊதாரித்தனமாக அதிமுக அரசு செலவு செய்ததாக விமர்சித்தும், உண்மைக்குப் புறம்பான முறையில் செயல்பட்டு பொய் வழக்குகளைப் போட்டாலும் அதிமுக சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.

  • அத்துமீறி நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் நுழைந்து சோதனை மேற்கொண்டதினால் 10ஆம் தேதி அன்று வெளியாக வேண்டிய நமது அம்மா பத்திரிகை வெளியாகவில்லை. பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசும் முதலமைச்சர், பத்திரிகையாளர் சுதந்திரத்தை நசுக்குகிறார்.

அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை உள்ளிட்டவற்றைக் கண்டித்து வெளிநடப்புச் செய்துள்ளோம். வெள்ளை அறிக்கை பற்றி அவையில் உரிய விளக்கம் அளிக்கப்படும். ஜெயலலிதா இருந்தபோது இருந்த நிதித் துறைச் செயலர் கிருஷ்ணன்தான் தற்போதும் நிதித் துறைச் செயலராக இருக்கிறார்.

  • எந்தத் திட்டத்தையும் இவர்கள் நிறைவேற்றவில்லை தற்போதுதான் வரவு-செலவுத் திட்ட அறிக்கைத் தாக்கல்செய்கிறார்கள். அதிமுக அரசின் திட்டங்களைத்தான் அவர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

100 நாள் ஆட்சியில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர். சட்ட ரீதியாக வழக்குகளை அதிமுக எதிர்கொள்ளும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

11:14 August 13

நீதித் துறைக்கு நிதி ஒதுக்கீடு

  • ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு இயக்கம் மாற்றி அமைக்கப்படும், போக்குவரத்து ஆணையரகம், போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் பெயர் மாற்றம்செய்யப்படும்.
  • அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து நீதிமன்றங்களிலும் போதிய கட்டடம் இருப்பது உறுதிசெய்யப்படும்.
  • புதிய நீதிமன்ற கட்டுமானத்திற்கு 351.87 கோடி ரூபாயும், நீதித் துறை நிர்வாகத்திற்கு ஆயிரத்து 713 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:08 August 13

அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

  • நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி உதவியுடன் ஐந்தாயிரத்து 500 கோடி ரூபாய் சிறப்பு கோவிட் கடன் உள்பட 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். 
  • 2021-22ஆம்  ஆண்டில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தொடங்கப்படும்.
  • ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். 
  • அனைத்து நகர்ப்புறங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த நடைபாதை அமைக்கப்படும். 
  • சீர்மிகு நகரம் திட்டத்திற்கு இரண்டாயிரத்து 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • ஆசிய மேம்பாட்டு வங்கி உதவியுடன் கொசஸ்தலை ஆற்றில் ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

10:53 August 13

கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தில் ரூ.3,548 கோடி வழங்கல்

  • பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த 500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும். 
  • சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் 150 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
  • தமிழ்நாட்டில் ஆறு இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும். இதற்காக 433 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்படும். 
  • அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.
  • குடிநீர் இணைப்பு வசதி இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கு 2022 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தில் 3,548 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 
  • மாநிலத்தில் உள்ள 79,395 கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 55 லட்சம் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை.

10:51 August 13

தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

  • குளங்களைத் தூர்வார ரூ.111.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்த்தேக்க கொள்ளளவு பழைய நிலைக்கு உயர்த்தப்படும்.
  • தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ஆறாயிரத்து 607 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • தணிக்கைத் துறையின் திறன் மேம்படுத்தப்படும்.
  • சட்டப்பேரவையின் ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும்

10:42 August 13

அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள்!

  • விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கிச் செல்ல அரசு உறுதியேற்றுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த 500 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 
  • தேவையுள்ள இடங்களில் நியாயவிலைக் கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும்.  
  • அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும்.

10:38 August 13

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை

  • சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு நான்காயிரத்து 807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • காவல் துறையில் 14 ஆயிரத்து 317 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறைக்கு 8,930.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நிதிநிலை சிக்கலை செய்து முடிக்க இரண்டு - மூன்று ஆண்டுகள் வரை முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். 
  • பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடக்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

10:35 August 13

தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை

  • கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக ஒன்றிய அரசின் வரிமுறை அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் தேதி கலைஞர் செம்மொழி தமிழ் விருது 10 லட்சம் ரூபாய் பரிசுடன் வழங்கப்படும்.
  • தமிழ் வளர்ச்சித் துறைக்கு 80 கோடி ரூபாயும், தொல்லியல் துறைக்கு 29 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • அனைத்துத் துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

10:34 August 13

செம்மொழி கலைஞர் சிறப்பு விருது

  • அனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தரவுகள் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். செம்மொழி கலைஞர் சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
  • செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும். உலக அளவில் போற்றப்படும் தமிழ்ப் படைப்புகள் உலக மொழிகள் மொழிபெயர்க்கப்படும்.
  • கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் போன்ற தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இந்தப் பணிகளுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கீழடியில் திறந்தவெளி கண்காட்சி அமைக்கப்படும்; கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

10:30 August 13

பொது நிலங்கள் மேலாண்மைக்குத் தனி அமைப்பு

  • பெட்ரோல், டீசல் வரி உயர்வால் ஒன்றிய அரசுக்கு 69 விழுக்காடு வருவாய் அதிகரித்துள்ளது, மாநிலங்களுக்கு குறைந்த அளவே வரி வருவாய் பிரித்து அளிக்கப்படுகிறது. 
  • பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது ஒன்றிய அரசின் கடமை. ஜிஎஸ்டி வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன. 
  • பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது. 
  • ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்; பொது நிலங்கள் மேலாண்மைக்குத் தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.

10:27 August 13

வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்

  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் குடும்ப அட்டைக்கு ரூ.4000 வழங்கப்பட்டது; தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வேளாண்மைக்கான தனி வரவு-செலவுத் திட்ட அறிக்கை நாளை தாக்கல்செய்யப்படும்.
  • தலைநிமிரும் தொலைநோக்கு திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து ஜிஎஸ்டி நிலுவைத்தொகையைப் பெற வல்லுநர் குழு அமைக்கப்படும்.

10:20 August 13

நிதி நிலைமையைச் சீர்படுத்துவது என்பது வாக்குறுதிகளில் ஒன்று - பிடிஆர்

  • 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் நாளன்று வெளியிடப்பட்டு அவை முன்னர் வைக்கப்பட்டுள்ள வெள்ளை அறிக்கை, முந்தைய அரசால் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிதி நிருவாகத் தவறுகள், அதிகரித்த பற்றாக்குறை, அதனால் ஏற்பட்ட பெருமளவு கடன் சுமையைப் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
  • அரசின் இந்தச் சரிவை நிறுத்தி, நிதி நிலைமையைச் சீர்படுத்துவது மக்களுக்கு நாங்கள் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். ஒரே நேரத்திலோ அல்லது ஒரே ஆண்டிலோ செய்து முடிக்க இயலாத அளவிற்கு இப்பணி மிகக் கடினமாக உள்ளது.
  • இதற்கு குறைந்தபட்சம் இரண்டு - மூன்று ஆண்டுகள் வரையிலும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

10:16 August 13

பழனிவேல் தியாகராஜன் உரை

  • முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் முத்திரைப் பதித்துள்ளன. முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளைத் தந்துள்ளார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு கடமைப்பட்டுள்ளது.
  • இந்த வாக்குறுதிகளின் அடிப்படையிலான, தலைநிமிரும் தொலைநோக்குத் திட்ட அறிக்கையில் உள்ள அம்சங்கள் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் அரசுத் துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் இந்த நிதியாண்டின் மீதமுள்ள ஆறு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும். கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடந்த சில மாதங்களாக மிகப்பெரும் அளவில் தாக்கியது. இதனால் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட விளைவுகள், ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த அரசை மேலும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளன.
  • எனவே அடுத்த ஆறு மாதங்களுக்குப் பின்  தாக்கல் செய்யவுள்ள 2022-2023ஆம் ஆண்டிற்கான முழு வரவு செலவுத் திட்டத்திற்கு வலுவான அடித்தளம் அமைப்பதே, இந்தத் திருத்த வரவு செலவுத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

10:05 August 13

தமிழ்நாடு வரவு-செலவுத் திட்ட அறிக்கை: வாசிக்கத் தொடங்கிய நிதியமைச்சர்

 தமிழ்நாடு 2021-2022ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கினார். அதிமுகவினரின் அமளிக்கிடையே வரவு-செலவுத் திட்ட அறிக்கை வாசித்துவருகிறார் பிடிஆர்.

10:03 August 13

கணினித் திரையைப் பார்த்துப் படிக்கும் அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையில் பார்த்து சபாநாயகர் அப்பாவு படித்துவருகிறார்.

09:59 August 13

தொடங்கியது வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர்

அவைத்தலைவர் அப்பாவு தலைமையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது.

09:51 August 13

ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார் பிடிஆர்!

வரவு-செலவுத் திட்ட அறிக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்துப் பெற்றார்.

09:49 August 13

அரங்கத்திற்கு வருகைதந்த முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும்

காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கைத் தாக்கல்செய்யப்படவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர்  கலைவாணர் அரங்கத்திற்கு வருகைதந்தனர்.

09:11 August 13

தமிழ்நாட்டில் முதன்முறையாக டிஜிட்டல் பட்ஜெட் (காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கை) இன்னும் சற்று நேரத்தில் தாக்கல்செய்யப்படுகிறது.

தமிழ்நாடு இ-பட்ஜெட் 2021
தமிழ்நாடு இ-பட்ஜெட் 2021

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் உள்ள மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட் 13) வரவு-செலவுத் திட்ட அறிக்கை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. முதன்முறையாக அமைச்சராகியுள்ள (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் முதல் காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல்செய்கிறார்.

இன்னும் சற்று நேரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல்செய்கிறார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பட்ஜெட் இன்று தாக்கல்!

Last Updated :Aug 14, 2021, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.