விஜயகாந்த் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

விஜயகாந்த் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!
Vijayakanth health: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறுநீர்ப்பை பகுதியிலிருந்த கொழுப்புக் கட்டி அகற்றப்பட்டதாகவும், உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடலில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாகத் தமிழ்நாடு அரசு பன்நோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அவரின் சிறுநீர்ப்பை பகுதியில் கல் இருந்ததாகக் கூறப்பட்ட பரிசோதனை செய்யப்பட்டதில் சிறிய கொழுப்புக் கட்டி இருந்து அகற்றப்பட்டுள்ளது.
மேலும் அவருக்குக் கழுத்து வலி உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகின்றனர். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர் கண்காணித்து வருகின்றனர் நாளை சிகிச்சை குறித்த முழு விபரம் வெளியிடப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை குறித்து மருத்துவர்களை நேற்று தொடர்பு கொண்டு கேட்டு இருந்தேன். இன்று ஒரு மணி நேரத்திற்கு முன்பும் மருத்துவரைக் கேட்டிருந்தேன் அவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால் அதற்குரிய மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தாலும் நலமுடன் உள்ளார்" என தெரிவித்தார்.
இதனிடையே, தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குச் சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாகத் தவறான செய்திகளை வெளியிடுவதை யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள் இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
