பிளம்பர், கொத்தனார், ஓட்டுநர் தேவையா? - வருகிறது தமிழக அரசின் 'செயலி'

author img

By

Published : May 22, 2023, 6:30 PM IST

chennai

'அமைப்புசாரா தொழிலாளர்கள் சேவை செயலி' மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பிளம்பர், கொத்தனார், எலக்ட்ரிஷியன்கள் போன்றவர்களுக்கு இடைத்தரகர் இல்லாமல் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இந்த செயலி, சோதனை அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்படவுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 'அமைப்புசாரா தொழிலாளர்கள் சேவை செயலி' உருவாக்கப்படும் என்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, 'அமைப்புசாரா தொழிலாளர்கள் சேவை செயலி' (Unorganised Workers Service App - UWSA) உருவாக்கப்பட்டு சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "தமிழக அரசின் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் 17 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் ஒரு லட்சம் பேர் ஓட்டுநர். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பின் மூலம் பெறும் வருமானத்தில் கிட்டத்தட்ட 30 சதவீதம் இடைத்தரகர்கள் கமிஷனாக பெறுவதாக தெரிவித்திருந்தனர். இந்த சிக்கலைப் போக்கும் வகையில் 'அமைப்புசாரா தொழிலாளர்கள் சேவை செயலி' தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் உருவாக்கப்படவுள்ளது.

இதன் மூலம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பிளம்பர், கொத்தனார், எலக்ட்ரிஷியன்கள், தச்சு வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள் போன்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக எங்கெங்கு வேலைவாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து வேலைக்குச் செல்லலாம்.

அதேபோல், இந்த செயலி மூலம் பொதுமக்கள் தினசரி அடிப்படையில் ஓட்டுநர்கள், கொத்தனார், தச்சு வேலை, சமையல்காரர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் போன்றவர்களின் சேவைகளைப் பெறலாம். சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இந்த செயலி மூலம் சேவை வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய சேவைகளைப் பெற வசதி செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை,

  • ’தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்சா வாங்கும் பொருட்டு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
  • அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு க்யூஆர் கோடு மற்றும் சிப் பொருத்திய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
  • தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் மகப்பேறு நலத்திட்ட உதவித்தொகை 6,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, தற்பொழுது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித் தொகை, ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பினை வீட்டிலிருந்து சென்று படிப்பதற்கு 1,000 ரூபாய் மற்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கு 1,200 ரூபாய் ஆகியவை ஆண்டிற்கு 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் இதர 16 நல வாரியங்களுக்கென புதியதாக சொந்த அலுவலகக் கட்டடம் கட்டப்படும்’ என்பனவாகும்.

இதையும் படிங்க: கழிவுநீர்த் தொட்டி இறப்புகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.