சட்டவிரோத டிஜே போதை விருந்து- போலீசை வசைபாடியவர்களுக்கு வலை

author img

By

Published : May 23, 2022, 7:08 PM IST

டிஜே நிகழ்ச்சிக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை

சென்னை அண்ணாநகரில் உள்ள மாலில் அனுமதி பெறாமல் நடந்த டிஜே பார்ட்டி மற்றும் மது விருந்தில் இளைஞர் உயிரிழந்த வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில், போலீசாரை அவதூறான வார்த்தைகளால் சமூகவலைத் தளங்களில் விமர்சிக்கும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை: அண்ணாநகரில் உள்ள பிரபலமான தனியார் மாலில், 'தி கிரேட் இந்தியன் கேதரிங்ஸ்' என்ற பெயரில் நேற்று முன்தினம் (மே 21) இரவு டிஜே நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற டிஜே மந்த்ரா கோரா என்பவரை அழைத்து வந்து நடத்தப்பட்ட பார்ட்டியில் ஏராளமான இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் ஐடி நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் அளவுக்கதிகமாக மது மற்றும் போதைப் பொருளை உட்கொண்டதால் சுய நினைவை இழந்து விழுந்தார்.

அவரது நண்பர்கள் பிரவீணை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அளவுக்கதிகமான போதையில் இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பின்னர் தான் சட்டவிரோத மது விருந்து குறித்த நிகழ்ச்சி போலீசாருக்கு தெரிய வந்தது. இளைஞர் உயிரிழந்த பின்னரும் மாலில் வழக்கம் போல பார்ட்டி தொடர்ந்தது. டிஜே பார்ட்டியின் நடுவே போலீசார் நுழைந்ததும், டிஜே மந்த்ரா கோரா மற்றும் இளைஞர்கள் ஆபாசமான வார்த்தைகளால் போலீசாரை விமர்சித்தனர்.

டிஜே மந்திராகோரா
டிஜே மந்திராகோரா

எனினும் தீவிரமான நடவடிக்கை எடுத்த போலீசார் பார்ட்டி செய்து கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். விசாரணையில், டிஜே நிகழ்ச்சிக்கு காவல் துறையினரிடம் முறையான அனுமதி பெறவில்லை என தெரிகிறது, அதேபோன்று டிஜே நிகழ்ச்சி என்ற பெயரில் மது விருந்தையும் காவல் துறையினருக்குத் தெரியாமல் சட்டவிரோதமாக நடத்தியுள்ளனர். மேலும் காபி ஷாப் நடத்துவதாக உரிமம் பெற்று மதுவிடுதி இயங்கி வந்ததையும் காவல் துறையினர் கண்டுபிடித்து அந்த பாருக்கு சீல் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினரிடம் அனுமதி பெறாமல் இந்த டிஜே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் மேலாளர்கள் நிகாஷ் போஜராஜ், பாரதி, பார் ஊழியர் எட்வின் ஆகியோரை அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் நேற்று (மே 22) கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகவுள்ள மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல மாலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், தனியார் மாலின் உரிமையாளரையும் விசாரணை நடத்தி அவரையும் வழக்கில் சேர்க்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க டிஜே நிகழ்ச்சியில் காவல் துறையினர் நடத்திய நடவடிக்கைக்கு, சமூகவலைத்தளத்தில் டிஜே நிகழ்ச்சி ஆதரவாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற டிஜே மந்திராகோரா, சென்னை காவல் துறையினரை அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். போலீசார் மாலுக்குள் நுழைந்த போது வசைபாடிய வீடியோவையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

சட்டவிரோத டிஜே பார்ட்டி - போலீசை விமர்சிக்கும் கும்பல்
சட்டவிரோத டிஜே பார்ட்டி - போலீசை விமர்சிக்கும் கும்பல்

மேலும் டிஜே நிகழ்ச்சி ஆதரவாளர்களும் சென்னை காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் சமூகவலைத்தளங்களில் வசைபாடி வருகின்றனர். ஏற்கனவே மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், காவல் துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டியவர்களில் ட்விட்டர் ஐடியை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கேரள விஸ்மயா வழக்கு: கணவர் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.