"திருமணமான மகன் உயிரிழந்தால் சொத்தில் பங்கு கேட்க தாய்க்கு உரிமையில்லை" - சென்னை உயர் நீதிமன்றம்!

"திருமணமான மகன் உயிரிழந்தால் சொத்தில் பங்கு கேட்க தாய்க்கு உரிமையில்லை" - சென்னை உயர் நீதிமன்றம்!
இந்திய வாரிசு உரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பவுலின் இருதய மேரி என்பவரின் மகன் மோசஸ்க்கும், அக்னஸ் என்பவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மோசஸ் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்தார். உயில் எதுவும் எழுதி வைக்காத மோசஸின் சொத்துக்களில் பங்கு கேட்டு அவரது தாய் பவுலின் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம், மோசஸின் சொத்தில், அவரது தாய்க்கும் பங்கு உள்ளது என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உயிரிழந்த மோசஸின் மனைவி அக்னஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷாவை நியமனம் செய்தனர்.
இந்த நிலையில், வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், "வாரிசுரிமை சட்டம் 42வது பிரிவின்படி, கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது. மனைவியோ, குழந்தைகளோ இல்லை என்றால் தந்தை சொத்துக்கு வாரிசு தாரராவார், தந்தையும் இல்லை என்றால் தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுகளாவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், திருமணமான மகன் இறந்த நிலையில், சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை எனவும், மனைவி அக்னஸ் மற்றும் குழந்தைகளுக்குத் தான் சொத்தில் பங்கு உள்ளது என்றும் தாய் பங்கு கேட்க முடியாது என்றும் தெரிவித்து, தாய்க்குச் சொத்தில் பங்கு உண்டு என்ற நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு அளித்தனர்.
மேலும், வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர் மித்ரா நேஷாவுக்கு நீதிமன்றம் சார்பாக நீதிபதிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
