தமிழர்கள் தான் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

author img

By

Published : Nov 24, 2022, 8:36 AM IST

தமிழர்கள் தான் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

வெளி நாட்டிலிருந்து தமிழகம் வந்து யாரும் தமிழர்களை ஏமாற்றி வெளி நாட்டிற்கு அழைத்து செல்வது இல்லை, தமிழர்கள் தான் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

சென்னை: அயலகத் தமிழர் தினத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்யும் பொருட்டு, அதற்கான வசதியினை "அயலகத் தமிழர்" நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தின் வலைதளத்தை ( https://nrtamils.tn.gov.in ) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். செஞ்சி மஸ்தான் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் இதுகுறித்துப் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், 'புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பினை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 12, அன்று "அயலகத் தமிழர் தினம் " கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், வரும் 11.01.2023 மற்றும் 12.01.2023, இரண்டு நாட்கள் "அயலகத் தமிழர் தினம் 2023" சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட உள்ளது.

இத்தினத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்பவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய புதிய மொபைல் ஆப்பை, வருகின்ற ஜனவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு நலத்திட்டங்கள் அடங்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். மேலும் அதில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லும் பட்சத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தமிழ்நாடு அரசு அவர்களை உடனடியாக மீட்பதற்கு சுலபமாக இருக்கும்.

இதுவரை வெளிநாட்டில் இருந்து 1,674 நபர்கள் தமிழ்நாட்டிற்கு மீட்டு கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு செய்திகள் வர வர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நபர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழர்கள் தான் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சமீபத்தில் மியான்மர் மற்றும் கம்போடியாவிலிருந்து 64 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக அரசு சார்பில் விமான செலவு செய்து, அவர்களுடைய பெற்றோரிடம் சேர்த்துள்ளோம். பதிவு செய்த முகவர்கள் மூலம், என்ன வேலை? என்ன சம்பளம்? என்று அறிந்து தமிழர்கள் வெளி நாட்டிற்குச் செல்ல வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு வந்து யாரும் தமிழர்களை ஏமாற்றி வெளி நாட்டிற்கு அழைத்துச் செல்வது இல்லை, தமிழர்கள் தான் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்” என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

இதையும் படிங்க: திருவிழாக்களில் ஆபாச நடனம்; டிஜிபி விளக்கமளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.