தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் முறைகேடு வழக்கு ; ஊழல் கண்காணிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Nov 24, 2022, 4:01 PM IST

தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் முறைகேடு வழக்கு ; ஊழல் கண்காணிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின், அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எஸ்.செல்வகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில், ”தமிழக தொழில் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் மூலம் 4 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதேபோல் இரண்டாவது சிமெண்ட் ஆலையில் 5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

மக்களின் வரிப்பணத்தில் நடைபெற்றுவரும் இந்த நிறுவனத்தில், கடந்த 2018 முதல் 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிட்ட போது, நிபந்தனைகளை மீறி பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும், பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் விதி மீறல் நிகழ்ந்தது.

கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களுக்கான டெண்டரிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது, இதனால் தமிழ்நாடு சிமென்ட் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

டெண்டரில் குறிப்பிடப்பட்ட தொகையை மீறி அதிக தொகைக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும், அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் மற்ற சிமெண்ட் நிறுவனங்களிடமிருந்து சிமெண்ட்களை வாங்கி, சலுகை விலையில் சிமெண்ட் வழங்கும் திட்டத்தின் கீழ், பயன்படுத்தப்பட்ட மென்பொருளை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டது” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முறைகேடுகள் குறித்து ஊழல் கண்காணிப்பு துறையிடம் அளிக்கப்பட்ட புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனு குறித்து ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: அரியர் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு.! அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.