சென்னை: அரியலூர் மாவட்டத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆண்டிமடம் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தனி தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி செயல்பட்டு வந்த தமிழ்நாடு விடுதலைப் படை என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர்.
அந்த அமைப்பைச் சேர்ந்த 14 பேர், ஆயுதங்களுடன் ஆண்டிமடம் காவல் நிலையத்தினுள் புகுந்து காவல் ஆய்வாளர், தலைமை காவலர்களை தாக்கினர். காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளை அடித்துவிட்டு, தனி தமிழ்நாடு கோரிக்கை தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீசி சென்றனர்.
இதையும் படிங்க: Viduthalai part 1: ஓடிடியில் வெளியானது வெற்றிமாறனின் விடுதலை
க்யூ பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேருக்கு எதிராக கொலை முயற்சி மற்றும் கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், மாறன், ரேடியோ வெங்கடேசன், பொன்னிவளவன் உள்ளிட்ட 11 பேருக்கு தலா பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று(மே.26) நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பூந்தமல்லி நீதிமன்றம் அளித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல் நிலையத்தை தாக்கவில்லை என்றாலும் கூட, துப்பாக்கி உள்ளிட்ட அரசு சொத்துகளை கொள்ளையடித்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு விடுதலைப் படை
தமிழ்நாடு பொதுவுடைமை கட்சி என்ற கம்யூனிச இயக்கத்தின் ஆயுதப் பிரிவாக தமிழ்நாடு விடுதலைப் படை உருவாக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை தனியாகப் பிரித்து தனித் தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு விடுதலைப் படையின் நோக்கம். இதற்காக ஆயுதம் ஏந்தி போரடி வந்தனர். இந்த இயக்கத்தின் பொறுப்பாளராக இருந்தவர் தமிழரசன்.
தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவின் அணைகளைத் தகர்க்கவும், வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு, பொன்பரப்பி என்னும் ஊரில் உள்ள வங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்டோர் திட்டமிட்டனர். அந்த சம்பவத்தின்போது தமிழரசன் அடித்துக் கொல்லப்பட்டார். பொதுமக்கள் போல சாதாரண உடையில் வந்த போலீசார், தமிழரசனை அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.