ETV Bharat / state

'தமிழில் அர்ச்சனை செய்யத் தடையில்லை ' - உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி!

author img

By

Published : Sep 3, 2021, 1:03 PM IST

கோயில்களில் எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்றும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்தத் தடையும் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி
உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.03) விசாரணைக்கு வந்தது.

அரசு தலையிடக் கூடாது

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "1998ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது. மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது" எனக் கூறி வாதிட்டார்.

முடிவை மறு பரிசீலனை செய்ய தேவையில்லை

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "2008 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உள்பட்டது. தமிழில் அர்ச்சனை செய்ய எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் அந்த உத்தரவில் ”ஏற்கனவே உயர் நீதிமன்றம் பரிசீலித்து அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது. ஆகவே முடிவை மறு பரிசீலனை செய்ய தேவையில்லை” என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மாணவிகளுக்கு கரோனா - பீதியில் பெற்றோர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.