பாலியல் குற்றத்தில் கைதான 7 பேருக்கு குண்டாஸ் ரத்து - உயர் நீதிமன்றம்

பாலியல் குற்றத்தில் கைதான 7 பேருக்கு குண்டாஸ் ரத்து - உயர் நீதிமன்றம்
பாலியல் குற்றத்தில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 7 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பாலியல் குற்றம் செய்தது மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரை ஒரே நேரத்தில் குண்டர் சட்டத்தில் அடைக்க கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து ஏழு பேர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. அதில், கைது செய்யப்பட்டதிலிருந்து ஏழு நாட்களுக்குள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டுமென சட்டம் உள்ள நிலையில், அவ்வாறு தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளனர்.
மேலும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பான உத்தரவை தமிழில் மொழி பெயர்த்து வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஏழு பேரும் அடைக்கப்பட்ட சிறைக்கே உத்தரவு அனுப்பப்பட்டதாகவும், அவர்கள் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசின் வாதம் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல எனவும், மேலும் உத்தரவு நகலை அவர்கள் பெற மறுத்தார்கள் என்பதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை எனக்கூறி, ஏழு பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ரூ.2 கோடி பணத்துடன் கடத்தப்பட்ட காரை சாலையோரம் விட்டு சென்ற கொள்ளையர்கள்
