கே.டி. ராகவன் விவகாரம் - என்ன நடக்கிறது பாஜகவில்?

author img

By

Published : Aug 24, 2021, 5:59 PM IST

Updated : Aug 24, 2021, 8:41 PM IST

ragavan

ஊரெல்லாம் விசாகா கமிட்டி அமைத்து, பெண்கள் தொடர்பான பாலியல் புகார் மீது விசாரிக்க வலியுறுத்தி கொண்டிருக்கும் நாமே, நம்மிடையே இருப்போர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து, விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும் என்று பாஜகவின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி. ரவி கொந்தளித்தார்.

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை தமிழ்நாடு அரசு சமீபத்தில் நடைமுறைப்படுத்தியது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவிக்க சிலரோ, ஆகம விதிகளை தமிழ்நாடு அரசு மீறுவதாக கொதித்தனர்.

சூழல் இப்படி இருக்க பாஜகவின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் வீடியோ விவகாரம் அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது.

ராகவன் வீடியோவை வெளியிட்ட பத்திரிகையாளர், பெண்களிடம் பாலியல் சீண்டல் பாஜகவில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது என்று கூறுவதன் மூலம் பாஜகவில் பெண்களின் பாதுகாப்பு நிலையை சாதாரணமாக கடந்து செல்லக்கூடாது என அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது.

பத்திரிகையாளர் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்
பத்திரிகையாளர் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்

வீடியோவை வெளியிட்ட பத்திரிகையாளர், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் ராகவன் குறித்த விஷயத்தை முன்கூட்டியே கூறியும் அண்ணாமலை எதற்காக விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேசமயம், அந்த பத்திரிக்கையாளரிடம் வீடியோ ஆதாரத்தை தான் கேட்டதாகவும், அதற்கு அந்த வீடியோவை தர அவர் மறுத்ததாகவும் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். நிலைமை இப்படி இருக்க அண்ணாமலையிடம் ராகவன் குறித்த வீடியோவை பத்திரிக்கையாளர் கொடுக்க மறுத்தது ஏன்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இது ஒன்றும் புதிதல்ல

ராகவனுக்கு நெருக்கமானவர் என்று கட்சியினரால் அறியப்படும் விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி கலிவரதன் கடந்த மாதம் பாலியல் புகாரில் சிக்கினார்.

அவர், மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கி தருவதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் ரூபாய் 5 லட்சம் வாங்கிக் கொண்டதாக பெண் ஒருவர் புகாரளித்திருந்தார்.

அதேபோல் கலிவரதன் தங்களை ஏமாற்றிவிட்டதாக இரண்டு பெண்கள் சாபம் விடும் ஆடியோ வெளியானது. ஆனால், இவர் மீது புகார் அளித்த பெண் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

சி.டி. ரவியின் கொந்தளிப்பு

கடந்த ஜூன் மாதத்தில் பாஜகவின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி. ரவி தலைமையில் சட்டப்பேரவை தேர்தல் தோல்வி மற்றும் பெண்கள் விவகாரத்தில் கட்சிக்கு வந்துள்ள புகார்கள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய ரவி, “எங்களிடம் வந்த புகார்களின் நம்பகத்தன்மையை விசாரித்துவிட்டுதான் வந்து பேசுகிறேன்.

மேலும் விசாரணையில் தெரியவந்துள்ள குற்றச்சாட்டு அனைத்தும் அறுவெறுப்பின் உச்சக்கட்டம்.

ஒரு தலைவர் மீது மட்டும் சுமார் 134 புகார்கள் வந்துள்ளன. அவ்வளவு புகார்கள் வந்த தலைவர்கள் மீது மக்கள் மற்றும் நிர்வாகிகள் எந்த அளவுக்கு கோபத்தில் இருந்திருப்பார்கள்.

இதுபோல சம்பவங்களை தவிர்க்க இனி தமிழ்நாடு பாஜக தலைவர்கள் யாரும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு செல்லக்கூடாது.

சி.டி. ரவி
சி.டி. ரவி

ஊரெல்லாம் விசாகா கமிட்டி அமைத்து, பெண்கள் தொடர்பான பாலியல் புகார் மீது விசாரிக்க வலியுறுத்தி கொண்டிருக்கும் நாமே, நம்மிடையே இருப்போர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து, விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.

இப்படியே போனால், கமலாலயத்துக்குள் கட்டாயம் விசாகா கமிட்டி ஒன்று அமைத்தாக வேண்டும்” என்று கொந்தளித்துள்ளார்.

குற்றவாளிகளின் கூடாரமா கமலாலயம்?

வட சென்னையைச் சேர்ந்தவர் கல்வெட்டு ரவி. இவரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். இவர் மீது 35 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

முக்கியமாக ஆறு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ரவி காவல் துறையினர் தேடும் ரவுடிகளின் பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவில் இருப்பவர்.

ஆனால் அவரோ தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு நாகராஜன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவருடன் சேர்ந்த சத்யா என்ற சத்தியராஜும் பாஜகவில் ஐக்கியமானார். அவர் மீதும் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மாவட்டங்கள்தோறும் கிளை

தலைநகர் பாஜகவின் நிலை இதுவென்றால் மற்ற மாவட்டங்களிலும் அக்கட்சி மீதான விமர்சனங்கள் கிளை பரப்பியிருக்கின்றன,.

சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஏராளமான கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி முரளி என்கிற முரளிதரனுக்கு அக்கட்சியின் இளைஞரணியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், நிதி நிறுவனம் நடத்தி கும்பகோணத்தில் பொதுமக்களிடம் பலநூறு கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படும் பாஜக பிரமுகர்கள் எம்ஆர் கணேஷ் , எம்ஆர் சுவாமிநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முற்றுப்புள்ளி எப்போது?

பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி பாஜகதான் என்ற பிம்பம் தமிழ்நாடு பாஜக தலைவர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் சூழலில் அந்தக் கட்சியின் மாநில பொதுச்செயலாளரே ஒரு பெண்ணிடம் இவ்வாறு நடந்துகொண்டது நிச்சயம் அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும், குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை பாஜகவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக தடுக்க வேண்டும்.

ராகவன் விஷயத்தில் அண்ணாமலையால் அமைக்கப்பட்டிருக்கும் மலர்க்கொடி தலைமையிலான விசாரணை குழுவானது, உண்மைத் தன்மை மாறாமல் விசாரித்து எதிர்காலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை கட்சியில் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் தாமரை இன்னும் கவலைக்கிடமான நிலைக்கு செல்லும் என்பதே யதார்த்தம்.

Last Updated :Aug 24, 2021, 8:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.