ஜெயலலிதாவின் புடவைகள் உட்பட 29 பொருட்கள் ஏலம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

author img

By

Published : Jan 25, 2023, 7:24 AM IST

ஜெயலலிதாவின் புடவை, காலனிகளை ஏலம் விட கர்நாடக அரசுக்கு உத்தரவு!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட, ஜெயலலிதாவின் புடவைகள், காலணிகள் உள்பட 29 பொருட்களை ஏலம் விட கர்நாடக அரசுக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை முதன்முதலாக முதலமைச்சர் பதவியை வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், 66 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாகத் தெரிய வந்தது.

இதனையடுத்து சொத்துக்குவிப்பு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டன.

இதனிடையே கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இதனையடுத்து பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதில், கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இதற்கு முன்னதாகவே ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டது. எனவே சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது விடுதலை ஆகியுள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நரசிம்மமூர்த்தி என்பவர், பெங்களூரு முதன்மை நகர சிவில் செசன்சு நீதிமன்றத்தில், பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி கடிதம் வழங்கினார். அதேபோல் கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அவர் கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில் பெங்களூரு முதன்மை நகர சிவில் செசன்சு நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திர ஹுத்தார், “ஜெயலலிதாவின் புடவைகள், காலணிகள் உள்பட 29 பொருட்களை கர்நாடக அரசு ஏலம் விட வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசு ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். மேலும் இதனை மிக விரைவாக செயல்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், "சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட கோரி, நான் நகர சிவில் செசன்சு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன். அந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு, அதன் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான் 3 பொருட்களை மட்டுமே ஏலம் விட கோரினேன். ஆனால் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட 29 பொருட்களையும் ஏலம் விடுமாறு உத்தரவிட்டுள்ளது.

இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை விரைவில் சந்திக்க உள்ளேன். அப்போது, இந்த நீதிமன்ற உத்தரவு நகலை வழங்கி, இதை விரைவாகச் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்க முடிவு செய்துள்ளேன். இதனை நான் தீவிரமாக எடுத்துள்ளேன்” என்றார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவாரா?; கே.எஸ்.அழகிரி சவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.