"பி.சுசீலாவின் குரலில் மயங்கியவர்களில் நானும் ஒருவன்" - பாட்டு பாடி பாராட்டிய முதலமைச்சர்
Published: Nov 21, 2023, 4:12 PM


"பி.சுசீலாவின் குரலில் மயங்கியவர்களில் நானும் ஒருவன்" - பாட்டு பாடி பாராட்டிய முதலமைச்சர்
Published: Nov 21, 2023, 4:12 PM

Tamilnadu Chief Minister: தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை கவின்கலைப் பல்கலைகழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் பாடகி பி.சுசீலா மற்றும் இசைக் கலைஞர் பி.எம்.சுந்தரம் ஆகிய இருவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தார்.
சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை கவின்கலைப் பல்கலைகழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பத்மவிபூஷன் பி.சுசீலா மற்றும் இசைக் கலைஞர் பி.எம்.சுந்தரம் ஆகிய இருவருக்கும் டாக்டர் பட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக, மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இரண்டு இசை மேதைகளுக்கு இன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த டாக்டர் பட்டம் அவர்களுக்கு வழங்கபடுவதால் இதன்மூலம் அந்த டாக்டர் பட்டமும் பெருமை அடைகிறது.
பாடகி பி.சுசீலா அவர்களின் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அவரது குரலுக்கு மயங்கியவர்களில் நானும் ஒருவன். வெளியூர் பயணங்களின் போது என்னுடைய காரில் நான் அதிகமாக கேட்கும் பாடல் பி.சுசீலா அவர்களின் பாடல் தான்.
அவரது குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை; உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை; காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை; உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை”. என்ற பாடல்.
எனக்கு மிகவும் பிடித்த பாடகி என்பதால் அவர் மேடைக்கு வந்த உடனே அம்மையாரை பார்த்தவுடன் வணக்கம் சொல்லிவிட்டு நான் உங்கள் ரசிகன் என்று வெளிப்படையாகவேச் சொன்னேன். பாடகி சுசீலா தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பெரும் புகழைப் பெற்ற பாடகி என்றார்.
பாடகி பி.சுசீலாவின் வாழ்க்கை வரலாறு: தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் சண்டிராணி படத்தில் இடம்பெற்ற அன்பாய் தேசம் எங்கும் ஒன்றாய் கூடி என்கிற பாடல் தான் தமிழில் பி.சுசீலா பாடிய முதல் பாடல். இந்திய திரை இசையியலில் கிட்டத்தட்ட 60 ஆண்டு காலமாக பல மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு அவரது பெயரில் டிரஸ்ட் ஒன்றை தொடங்கி அதன் மூலம் நலிவற்ற இசை கலைஞர்களுக்கு மாதம் மாதம் உதவித்தொகையும், டிரஸ்ட் சார்பில் சிறந்த இசை கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கி வருகிறார் பி.சுசீலா.
இதுவரை ஐந்து முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ள பி.சுசீலாவிற்கு இசைக்குயில், கான கோகிலா, கானக்குயில், கான சரஸ்வதி, மெல்லிசை அரசி, என பல்வேறு பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகள் மட்டுமல்லாமல் படுகா சிங்களம், ஒரியா, பஞ்சாபி துலு போன்ற மொழிகளிலும் பல்வேறு பாடல்களையும் பி.சுசீலா பாடியுள்ளார். அதிக பாடல்களை பாடிய பாடகி என்கிற சாதனையை படைத்து கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
இப்படி பல்வேறு சாதனைகள், கிட்டதட்ட 60 ஆண்டுகாலமாக தனது வசிகர குரலால் காலத்தால் அழியாத பாடல்களை பாடியுள்ள பி.சுசீலா நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவுவது என சமூகச் சேவைகளையும் செய்து வருகிறார்.
