ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன்  ஒன்றிணைய சாத்தியமா..?

author img

By

Published : Aug 3, 2022, 7:23 AM IST

Updated : Aug 3, 2022, 7:35 AM IST

Eஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைய சாத்தியமா..?tv Bharat

அதிமுகவில் தற்போது நிலவும் குழப்பமான சூழ்நிலையில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைந்து ஒரே பாதையில் பயணிப்பதற்கு சாத்தியமா? இது குறித்த விரிவான தொகுப்பை காணலாம்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அரசியல் மாற்றங்கள் பல நிகழ்ந்தன. முதலில் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ் பின்னர் நிர்பந்தம் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.பின்னர் அவர் தர்மயுத்தத்தை தொடங்கினார். அப்பொழுது சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கினர்.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். பின்னர் டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஓர் அணியாகவும், ஓபிஎஸ் ஓர் அணியாகவும் செயல்பட்டு வந்தனர். காலப்போக்கில் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் சிறைக்குச் செல்ல ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்தன.

புதிய கட்சி : இதனால் டிடிவி தினகரன் தனியாக சென்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அன்றிலிருந்து அதிமுக இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வந்தது. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என அப்போது இருந்தே ஒரு விமர்சனம் இருந்தது.

அந்த விமர்சனத்திற்கு வலுவூட்டும் விதமாக அவ்வப்போது இரு தரப்பினரும் உரசி கொண்டிருந்தனர். காலங்கள் நகர கிட்டத்தட்ட நான்கு ஆண்டு காலம் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஆட்சியை நிறைவு செய்தார். பின்னர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களை கைப்பற்றிய அதிமுக ஆட்சியை இழந்தது.

கடந்த ஒரு வருடமாக அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை என விமர்சனங்களும் எழுந்தன. இப்படியே அதிமுக பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் நகர்ந்து கொண்டிருந்தது.

ஓபிஎஸ்,
ஓபிஎஸ்

2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது சிறை வாசத்தை முடித்துக் கொண்ட சசிகலா சென்னை திரும்பினார். ஓபிஎஸ், இபிஎஸ் அணி இணைந்தது முதலே சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக்கூடாது என உறுதியாக இருந்தனர்.

எடப்பாடியின் முடிவை தெரிந்து கொண்ட சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார். சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்பு மீண்டும் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். தொண்டர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடுவது மற்றும் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார்.

சட்டப்போராட்டம் : 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தற்காலிக பொதுச் செயலாளர் தான் எனவும் தற்போதும் அதிமுகவின் பொதுச் செயலாளர் தான் எனவும் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் சசிகலா தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இரண்டு தரப்பும் சென்றுள்ளன. குறிப்பாக வங்கி கணக்குகள் மற்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொறுப்புகள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் கையில் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையை பயன்படுத்தி அதிமுகவை கைப்பற்றி விட வேண்டுமென சசிகலா பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக மூத்த நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா சந்தித்தார்.

ஒற்றை தலைமை விவகாரம் ஆரம்பித்த பொழுது ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. சசிகலாவுக்கு அதிமுகவை கைப்பற்றுவது குறித்து சில யோசனைகளை பண்ருட்டி ராமச்சந்திரன் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

குழப்பம் : அதிமுகவில் இருந்த ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் முகமாகவும், இபிஎஸ் மேற்கு மாவட்டங்களின் முகமாகவும் பார்க்கப்பட்டன. ஓபிஎஸ்சை நீக்கிவிட்டு ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது என்பது தென் மாவட்டங்களில் மிகப்பெரிய தாகத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரன் வரிசையில் ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்படுவது தென் மாவட்டங்களில் ஒரு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே சமூகம் : இந்த குழப்பமான சூழ்நிலையை மையமாக வைத்து சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மூன்று பேரும் தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இரட்டை தலைமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது சசிகலாவுக்கு ஆதரவாக பல கருத்துக்களை ஓபிஎஸ் கூறி இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ், பின்னாளில் எந்த சந்தேகமும் இல்லை என கூறியிருந்தார். இப்படி ஓபிஎஸ்க்கும் சசிகலாவுக்குமே கடந்த காலங்களில் ஏராளமான முரண்பாடுகள் இருந்திருக்கின்றன.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவும் தற்போது இணைந்து செயல்படவில்லை. அதிமுகவின் பொதுச்செயலாளர் தான் சசிகலா, நான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார். இப்படி இவர்கள் மூன்று பேருக்குள்ளேயே கடந்த காலங்களில் இருந்து தற்போது வரை முரண்பாடுகள் இருக்கின்றன. மற்றொருபுறம் சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ்சின் ஆதரவாளரும், தேனி மாவட்ட செயலாளருமான சையது கான் டிடிவி தினகரனை வரவேற்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது. இப்படி மாறி மாறி ஒரு குழப்பமான சூழ்நிலையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சவால் : ஈபிஎஸ் தரப்பினர் ஆளுங்கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது மற்றும் அறிக்கை விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஜுலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையம் ஒற்றை தலைமை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடவில்லை. இவ்வளவு குழப்பங்களுக்கு மத்தியில் அதிமுகவை ஒன்றிணைப்பது சசிகலாவிற்கு மிகப்பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.

சமுதாய இணைப்பு : இது குறித்து நம்மிடையே பேசிய அரசியல் ஆய்வாளர் மார்க்ஸ், "ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இணைவதற்கு அதிகளவில் வாய்ப்புகள் இருக்கிறன. மூன்று பேரும் இணைந்தாலும் பெரிய அளவில் ஈபிஎஸ்க்கு பாதிப்பு இருக்காது. இவர்கள் மூன்று பேரும் இணைந்தால் அது ஒரு சமுதாய இணைப்பு போன்றே இருக்கும். சசிகலா அதிமுகவை கைப்பற்ற பல மூத்த நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அவருடைய முயற்சி எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிமுகவின் தற்போது நிலையை பயன்படுத்தி பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது" என கூறினார்.

Last Updated :Aug 3, 2022, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.