பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. கோயம்பேட்டில் பெண் பத்திரிகையாளருக்கு கசப்பான அனுபவம்

author img

By

Published : Jan 21, 2023, 12:56 PM IST

Updated : Jan 21, 2023, 1:09 PM IST

பாதுகாப்பின்மையில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு.. பெண் பத்திரிகையாளரின் கசப்பான அனுபவம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பெண் பத்திரிகையாளருக்கு சிஎம்டிஏ மற்றும் சென்னை காவல் துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பெண் பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் புகார்
பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் புகார்

அதில், “நள்ளிரவில் கோயம்பேடு பேருந்து நிலையம், மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், காற்றில் வரும் சிறுநீரின் துர்நாற்றம், மது அருந்தியவர்கள் மற்றும் மற்றவர்களிடம் அத்துமீறலில் ஈடுபடுபவர்களால் தாராளமாக நிரம்பியுள்ளது. இது சென்னையின் பிரதான பேருந்து நிலையத்தை, ஒரு பெண்ணுக்கு பயமுறுத்துவதாகவும் மற்றும் பாதுகாப்பற்றதாகவும் மாற்றுகிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு நபர் என்னிடம் சுமார் 15 நிமிடங்கள் அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டார். நான் எனது மொபைலில் அவரை புகைப்படம் எடுக்க முயன்றபோது, அங்கிருந்து அவர் தப்பி ஓடினார். அந்த நேரத்தில் நான் மிகவும் பயந்த நிலையில் இருந்தேன். இந்த நேரத்தில் பணி மற்றும் வாழ்வாதாரத்திற்காக பேருந்து ஏற வரும் பெண்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என பதிவிட்டிருந்தார்.

மேலும் இந்த பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகிய இருவரின் ட்விட்டர் கணக்கையும் இணைத்திருந்தார். இதனையடுத்து இந்த பதிவு வைரலானது. இந்த நிலையில் இதற்கு பெருநகர சென்னை காவல் துறை ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.

பெண் பத்திரிகையாளரின் புகாருக்கு பெருநகர சென்னை காவல் துறையின் பதில்
பெண் பத்திரிகையாளரின் புகாருக்கு பெருநகர சென்னை காவல் துறையின் பதில்

அதில், “இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவித அவசர உதவிக்கும் 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் மட்டும் 12,555 அழைப்புகள் பெறப்பட்டு, அதற்கு 4 நிமிடம் 45 நொடிகளுக்குள் உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் காவல் உதவி மொபைல் ஆப்பிலும் புகார் அளிக்கலாம்” என தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பெண் பத்திரிகையாளரின் பதிவுக்கு பதிலளித்துள்ள சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா ஐஏஎஸ், “உங்களது கசப்பான அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். பேருந்து நிலையத்தில் சுகாதாரமாக வைப்பதற்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுப்போம். தவறுகளை எடுத்துரைத்ததற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

பெண் பத்திரிகையாளரின் புகாருக்கு சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ராவின் பதில்
பெண் பத்திரிகையாளரின் புகாருக்கு சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ராவின் பதில்

மேலும் கடந்த ஒரு வார காலமாக பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயங்கியதால், மக்களின் வருகை பேருந்து நிலையத்தில் அதிகமாக காணப்பட்டது. அதேநேரம் ஏற்கனவே கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மறைவான இடங்களில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: +2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு.. டெல்லி கொடூரம்!

Last Updated :Jan 21, 2023, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.