ஐரோப்பா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த சென்னை ஐஐடியின் ஹைப்பர் லூப் நிறுவனம்
Published: May 22, 2023, 6:20 PM


ஐரோப்பா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த சென்னை ஐஐடியின் ஹைப்பர் லூப் நிறுவனம்
Published: May 22, 2023, 6:20 PM
சென்னை ஐஐடியின் ஹைப்பர் லூப் நிறுவனம் ஐரோப்பா நிறுவனத்துடன் சேர்ந்து அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கும் பணியில் இணைந்து செயல்படுகிறது.
சென்னை ஐஐடி மூலம் தொழில் ஊக்குவிப்பு செய்யப்படும் டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'TuTr Hyperloop' கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் அறிவுசார் சொத்துரிமையை உருவாக்கும் பணியில் இணைந்து செயல்படுகிறது. ஹைப்பர்லூப் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்காக டாடா ஸ்டீல் நிறுவனத்துடனும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் கூட்டுச் சேர்ந்துள்ளது.
2030ஆம் ஆண்டு சோதனை முறையிலான இயக்கத்தை நடைமுறைப்படுத்துவது என்ற இலக்கை நோக்கி திட்டமிடல் உருவாக்கப்படவுள்ளது. ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பு மற்றும் அமைப்பு முறைகளை உருவாக்கி மேம்படுத்துவதற்காக பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான சேவைத் துறையில் ஈடுபட்டுள்ள மிகப்பெரிய இந்திய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் அமைந்துள்ள நேஷனல் சென்டர் பார் கம்பஷன் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் (NCCRD)-ல் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 'TuTr Hyperloop' ஒரு டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக இயங்கி வருகிறது. புத்தாக்க மையமான டீம் ஆவிஷ்கார் செயல்படுத்திவரும் பணிகளை முன்னெடுத்துச் செல்லவும், ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை வணிகப்படுத்தவும் இந்நிறுவனம் செயல்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து ஹைப்பர் லூப் அவிஷ்கார் குழுவின் ஆலோசகரும், விண்வெளிப் பொறியியல் துறையின் பேராசிரியரும், ஐஐடி என்சிசிஆர்டி ஒருங்கிணைப்பாளருமான சத்யநாராயணன் சக்ரவர்த்தி கூறும்போது, “பிற போக்குவரத்து சாதனங்களோடு ஒப்பிடும்போது குறைந்த செலவில், அதே நேரத்தில் பசுமை சார்ந்த வகையில் வாடிக்கையாளர்களின் 'தேவைக்கு ஏற்ப' நம்பகமான போக்குவரத்தை வழங்குவதே TuTr-ன் நோக்கமாகும்.
ஐஐடி மெட்ராஸ்-உடனும், இந்தியாவின் மிகப்பெரிய டீப்டெக் சுற்றுச்சூழல் அமைப்புடனும் இணைந்திருப்பதன் மூலமாக குறைந்த செலவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க இந்நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சரக்குப் போக்குவரத்தில் உள்ள பிரச்னைகளைக் களைந்து தொடர்புடையவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் ஆரம்பகட்டமாக அதில் முழுக் கவனம் செலுத்தப்படும்.
இந்தியாவிலும், உலக அளவிலும் பயணிகள் போக்குவரத்துக்காக அதிவேக இயக்க வழித்தடங்களை உருவாக்குவதில் இப்பணிகள் ஒரு தொடக்கமாக அமையும்.
ஐரோப்பா- இந்தியா ஹைப்பர்லூப் கூட்டு ஒத்துழைப்பு
ஐரோப்பா- இந்தியா இடையே இயக்கத்திற்கான ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக முன்னணி ஐரோப்பிய தொழில்நுட்ப நிறுவனமான 'Hardt Hyperloop' நிறுவனத்துடன் 'TuTr Hyperloop' உத்திசார் கூட்டு சேர்ந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை உருவாக்குதல், பரிசோதித்தல், அபாயங்களைக் களைதல், பயன்பாட்டிற்குக் கொண்டுவருதல் ஆகியப் பணிகளை கூட்டு முயற்சியுடன் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு சோதனை முறையிலான இயக்கத்தை நடைமுறைப்படுத்துவது என்ற இலக்கை நோக்கி திட்டமிடல் உருவாக்கப்படும்.
ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், வணிகரீதியான பயன்பாட்டை ஏற்படுத்தவும், எதிர்காலத்தில் போக்குவரத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஐரோப்பிய ஹைப்பர்லூப் தொழில்நுட்ப நிறுவனமான ஹார்ட், ஹைப்பர்லூப் தொழில்நுட்பங்களை உருவாக்கி விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நெதர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனைக்கான தொழிற்சாலைகளில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஆணையத்திடம் முதலீட்டிற்கான உறுதிப்பாட்டைப் பெற்றுள்ள இந்நிறுவனம், ஐரோப்பாவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை வணிகப்படுத்தும் நோக்குடன் ஐரோப்பிய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: “ஃபீளீஸ் எங்க ஸ்கூல்ல பசங்கள சேருங்க”: வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் செய்த மாணவர்கள்!
