"மீண்டும் இளைஞரணிச்செயலர் பதவி - மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்" - உதயநிதி

author img

By

Published : Nov 23, 2022, 5:30 PM IST

Youth

திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவி மீண்டும் அளிக்கப்பட்டுள்ளதை மிகப் பெரிய பொறுப்பாக பார்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் மறுகுடியமர்வு செய்வதற்கான கருணைத் தொகையை வழங்கிய பின்னர் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

சென்னை: சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், இப்பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு மறுகுடியமர்வு செய்வதற்கான கருணைத்தொகை வழங்கப்பட்டது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பயனாளிகளுக்கு மறுகுடியமர்வு செய்வதற்கான கருணைத்தொகையை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்றத்தொகுதியில் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளுக்கும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னுரிமை அளிக்கிறார். தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் தற்போது குடியிருப்புகள் கட்டித் தரப்படுகின்றன.

கொய்யாத்தோப்பு பகுதிகளில் ஏற்கெனவே பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. தற்போது நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் குடியிருப்புகள் கட்டுவதற்கானப் பணிகள் தொடங்கியுள்ளன. திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களுக்குத் தேவையானதை முதலமைச்சர் பார்த்து, பார்த்து செய்து வருகிறார். முதலமைச்சர் வழியில் மக்களுக்கு உழைக்கத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் த.மோ.அன்பரசன், "திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதலமைச்சர் உத்தரவின் பேரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆய்வு மேற்கொண்டோம். அதில், சென்னையில் 27 ஆயிரம் வீடுகள் மோசமான நிலையில் உள்ளதாக தெரியவந்ததையடுத்து, புதிதாக வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படவுள்ளன.

மறுகுடியமர்வுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் 8 ஆயிரம் ரூபாய்தான் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் மக்களின் பொருளாதார நிலையைக் கருதி 24ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் தரமில்லாமல் வீடுகள் கட்டப்பட்டன.

திமுக ஆட்சியில் தரமாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்டு வரும் வீடுகளில் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு 3 மாதத்திற்கு ஒரு முறை அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து வருகின்றனர்" என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் பதவி மீண்டும் அளிக்கப்பட்டுள்ளதை மிகப்பெரிய பொறுப்பாக பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் ரூ.48 கோடியில் நலத்திட்டப் பணிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.