சில சுதந்திர போராட்ட வீரர்கள் வரலாறு திரித்து எழுதப்பட்டுள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By

Published : Jan 23, 2023, 7:45 PM IST

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் சுதந்திரப்போராட்ட வீரர்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் - ஆளுநர் ரவி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் குறைந்தபட்சம் ஐந்து சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி ஆழமாக, தெளிவாக ஆராய்ச்சி மேற்கொண்டு அவர்களைப் பற்றி கட்டாயம் கட்டுரைகள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை: நாட்டின் விடுதலைக்காக முக்கிய பங்காற்றிய சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்சின் 126-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி தலைமை ஏற்று நடத்திய பெருமைக்குரியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் நாட்டிற்கு ஆற்றிய தொண்டை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாள் பராக்கிரம திவாஸ் என்ற பெயரில், தேசிய வல்லமை தினமாக மத்திய அரசால் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை கிண்டியில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடன் இந்திய இராணுவ படையில் பணியாற்றியவர்கள், தங்களின் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பெண்கள் படை பிரிவில் 15 வயதில் கலந்து கொன்டு 2 ஆண்டுகள் பணியாற்றிய லட்சுமி கிருஷ்ணன் நாயுடு, துணை நிலை ராணுவ அதிகாரியாக பணியாற்றிய மாதவன் உள்ளிட்டவர்கள் பேசினர். பின்னர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பேசும்போது, "இந்தியாவின் சிறந்த மகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று. இந்த தினம் மிகவும் தனித்துவம் மிக்க நாள். நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜியின் தலைமையின் கீழ் பணியாற்றி, மிக சிறந்த பங்காற்றிய வீரர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய எண்ணற்ற கதாநாயகர்களை பற்றி பிரச்சாரம் செய்து வருகிறார். நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு விடுதலை போராட்ட வீரன் இருக்கிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளனர்.

நாம் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய எந்த ஒரு வீரரையும் மறந்து விட முடியாது. சுதந்திரம் நமக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை. அத்தகைய சுதந்திரதிற்காக சண்டையிட்டவர்களை, நாம் எவ்வாறு ஒதுக்கி வைக்க முடியும், எவ்வாறு மறக்க இயலும். சுதந்திரம் கிடைத்த பிறகு, நம் நாட்டில் நாம் நமது ராணுவத்தை ஒதுக்கி வைத்தோம்.

பாரத பிரதமர் 21 பரம் வீர் சக்ரா விருது பெற்ற வீர்களின் பெயர்களை பெயரிடப்படாத அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சூட்டியுள்ளார். நான் தமிழ்நாட்டிற்கு வந்தவுடன் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்றும், அவர்கள் யார் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டேன். அப்போது என்னிடம் 200 நபர்கள் பற்றி கூறினார்கள், அவர்கள் எல்லாம் தலைவர்கள் அதைவிட களத்தில் நின்று போராடிய நிறைய சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

நாம் சுதந்திரதிற்கு போராடிய அனைத்து தியாகிகள் பற்றியும் ஆவண படங்கள் தயாரித்து சேகரித்து வைக்க வேண்டும். அதிலும் இன்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை பற்றிய விவரங்களை நாம் சேகரித்து வைக்க வேண்டும். 1947 ல் இங்கிலாந்து நாட்டை விட்டு வெளியேற காரணம் என்ன? என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாததை உணர்ந்தார்கள். இந்தியாவில் தங்கி இருந்த இங்கிலாந்து குடும்பத்தினர், இந்திய ராணுவம் மற்றும் காவல்துறை இரண்டின் மீதும் நம்பிக்கை இழந்தனர்.

நான் இதை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன், அதற்காக மத்திய உளவுத்துறை தகவல்களை தெரிந்து கொண்டேன். உளவுத்துறை 1946 இல் லண்டனுக்கு ஒரு அறிக்கையை அளித்தது. அதில் இந்தியாவில் இருக்கும் இங்கிலாந்தை சேர்ந்தவர்களுக்கு எந்த நேரத்திலும் பாதுகாப்பில் உள்ள இந்திய ராணுவம் மற்றும் காவல் துறையினரால் ஆபத்து ஏற்படலாம் என அறிக்கையை அளித்திருந்தது. உண்மையிலேயே அவர்களை பயம் கொள்ள செய்தது இந்த நிகழ்வு தான்.

காங்கிரஸ் மீது ஆளுநர் மறைமுக விமர்சனம்: இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை உண்மை தன்மையுடன் மீண்டும் எழுத வேண்டும். சுதந்திரத்திற்கு பின்னர் ஆங்கிலேயரை சிலகாலம் நிர்வாக தலைமையிலும், ராணுவ தலைமையிலும் அப்போதிருந்த இந்திய தலைவர்கள் அனுமதித்ததால் காஷ்மீரை ஆங்கிலேயர் பிரித்து பாகிஸ்தானுக்கு வழங்கிவிட்டனர்.

ஆங்கிலேயர் வெளியேறியபோது குறிப்பாக மவுண்ட்பேட்டர்ன் வெளியேறியபோது அப்போதிருந்த சில தலைவர்கள் கண்ணீர் சிந்தினர் இது வேடிக்கையான ஒன்று. அந்த தலைவர்களுக்கு ஆங்கிலேயர் நம் நண்பரா, விரோதியா என்கிற குழப்பம் இருந்தது. அத்தகைய தலைவர்களால் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி உயிரிழந்தவர்களின் தியாகம் கேள்விக்குரியாகியது.

ஒரு கட்சியால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையாதவர்களும், ஆயுதம் ஏந்தி ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களும் சுதந்திரத்திற்கு பின்னர் மறைக்கப்பட்டனர்.

பல்கலைக்கழங்களுக்கு ஆளுநர் உத்தரவு: ஓராண்டுக்குள் பல்கலைக்கழகங்கள் தங்கள் பகுதிகளில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறைந்தது 5 பேரின் வாழ்க்கை குறித்து விரிவான ஆய்வு செய்ய வேண்டும். முன்பு நான் இதுகுறித்து வைத்த வேண்டுகோளை சில பல்கலைக்கழங்கள் செவிமெடுக்கவில்லை. ஆனால் இம்முறை இந்த ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

தமிழகத்தில் மானுடவியல் மற்றும் கலையியல் தலைப்புகளில் கடந்த 2002 ம் ஆண்டு முதல் 2020 வரை 30 ஆயிரம் பேர் தமிழகத்தில் P.HD செய்துள்ளனர். அவற்றுள் 6 ஆயிரம் பேர் ஒரு சில தலைவர்களை பற்றி மட்டுமே ஆராய்சி செய்துள்ளனர். இதனால் அந்த தலைவர்களின் பங்களிப்பு, செயல்பாடுகள் உண்மைக்கு மாறாகவும், திரித்தும் எழுதப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக அரசாங்கம் அமைந்த இடம் அந்தமான் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.